சு.ரா. உரைகள்

Camera

நம்மால் மழைக்குத் தொந்தரவு இல்லை

அன்பார்ந்த நண்பர்களே,

முதலில் நான் ஒரு நல்ல மன நிலையில், சந்தோஷமான மனநிலையில் இருக்கிறேன் என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு இலக்கிய கூட்டத்திற்கு இந்த அளவுக்கு நண்பர்கள் வருவார்கள் என்பது தமிழ்நாட்டிலே ரொம்ப அபூர்வமான விஷயம்.

ஒரு இலக்கிய கூட்டத்திற்கு இந்த அளவுக்கு நண்பர்கள் வருவார்கள் என்பது தமிழ்நாட்டிலே ரொம்ப அபூர்வமான விஷயம். அதிக அளவு கூட்டம் வந்தாலும் இலக்கியக் கூட்டத்தில் பிரச்சினைதான். போதுமான அளவு வந்திருக்கிறார்கள். உட்கார்ந்திருப்பது, அதற்கான அமைப்பு, சூழல் எல்லாமே மனதுக்கு இதமாயிருக்கிறது. வெளியிலே மழை பெய்வது அதிக சந்தோஷம் தருகிறது. மழை பெய்யும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. அது இன்னும் சந்தோஷமளிக்கிறது. மழையோடு குறுக்கீடில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறோம். மழையால் நமக்கு எந்தத் தொந்தரவுமில்லை. நம்மால் மழைக்கும் தொந்தரவில்லை.

நீண்ட நாட்களாக இந்த ஊருக்கு வரவேண்டும் என்னும் எண்ணமிருந்தது. திருவண்ணாமலை எனக்குத் தெரிந்த ஊர் அல்ல. இந்த ஊரைத் தாண்டிப் போயிருக்கிறேன். இங்கே தங்கியதில்லை. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலர் திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார்கள். கோவிலில் கும்பிடவேண்டும் என்பதற்காக, புகழ்பெற்ற ரமண மஹரிஷியைப் பார்ப்பதற்காக. நான் அந்தக் கோவிலுக்குப் போனதில்லை. ரமண மஹரிஷியைப் பார்த்ததில்லை. மடத்துக்கும் போனதில்லை.
இப்படிக் குடும்பத்தினர் வந்து சென்றதற்குப் பின்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்தபோது ஆண் குழந்தைக்கு ரமணன், பெண் குழந்தைக்கு ரமணி என்று பெயர் வைத்தார்கள். அப்படி பெயர் பெற்ற ஒரு ரமணி தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண் க’ளில் வருகிறாள். அது நாவலில் சொல்லப்படவில்லை. இந்த ரமணி முன்னர் வேறு சிறுகதைகளிலும் வந்திருக்கிறாள். இந்த ரமணி என்னும் பெயர், எங்கள் குடும்பத்தில் பலருக்கு இருக்கிறது. இந்த ஊர் அவர்களுக்கு முக்கிய இடமாக இருந்திருக்கிறது என்பது இன்று என் மனதில் ஞாபகமாக உள்ளது.

பொதுவாக எனக்குப் பேசுவதில் நம்பிக்கை இல்லை என்று பவா சொன்னார். அது உண்மைதான். அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னால் கூப்பிட்டபோது, கூட்டம் என்று எதுவும் வேண்டியதில்லை, ஹோட்டலில் அறை எடுத்து நமது நண்பர்கள் அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொள்ளலாம் என்று சொன்னேன். இந்த மாதிரி இடத்தில் எழுத்தாளன் சிக்கிக்கொள்ளக் கூடாது. மேடை, பேச்சு இவற்றிலெல்லாம் அவனுடைய கெட்டிக்காரத் தனத்தைக் காட்டிப் பெயர், புகழ் வாங்கி இந்த மாதிரி கவர்ச்சிக்கெல்லாம் ஆளாகிவிட்டால் அவனுடைய கவனத்தில் அது முக்கியமான விஷயமாகிவிடும். படைப்பு இரண்டாம் பட்சமான விஷயமாகிவிடும் என்னும் கவலை எனக்குண்டு.

மற்றபடி சிறுகதை என்று எடுத்துக்கொண்டாலும் சரி, நாவல் என்று எடுத்துக்கொண்டாலும் சரி, கவிதை என்று எடுத்துக்கொண்டாலும் சரி ஒரு படைப்பாளிக்கு பிரக்ஞை இருக்கும் எனில், ஒரு தெளிவு இருக்கும் எனில், அதெல்லாம் முழுமையான படைப்புதான். அவன் கவிதைகளில் நுட்பம் இருக்கிறது, அதைக் கவனி என்றெல்லாம் வாசகன் பக்கத்தில் உட்கார்ந்து சொல்ல வேண்டும் என்னும் அவசியம் இல்லை. படைப்புக்குள் எல்லாமே இருக்கிறது. சிறுகதை, கவிதைக்குள் படைப்பாளி அனைத்தையும் வைத்துள்ளான்.

டால்ஸ்டாய் பற்றி உங்களுக்குத் தெரியும். ‘அன்னா கரீனினா’ படித் திருப்பீர்கள், அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘போரும் வாழ்வும்’ கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘புத்துயிர்ப்பு’ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவற்றையெல்லாம் படிக்கும் சமயத்தில் அவர் இல்லையே என்னும் வருத்தமெல்லாம் எழவில்லை. படைப்புகள் முழுமையாகவே உள்ளன. புத்தகத்தைப் படிப்பதற்கு அதை எழுதிய ஆசிரியருடைய உதவி தேவையெனில் அந்தப் படைப்பு முழுமையாக்கப்பட வில்லை என்று அர்த்தம். இரண்டாவது, படைப்பில் இருக்கக்கூடிய விஷயத்துக்கு மேலாக ஒரு படைப்பாளி வாசகனிடம் எதையாவது சொல்ல முடியும் என்று நான் நம்பவில்லை.

படைப்பாளி என்ன கேட்கலாம் என்றால், முழுமையாகப் படி, என் படைப்பைத் திரும்பத் திரும்பக் கவனமாகப்படி, நுட்பமாகப் படி என்று வாசகர்களைக் கேட்கலாம். வாசகனுக்கு விருப்பமிருந்தால் அவன் நுட்பமாகப் படிப்பதன் மூலம் கவனமாகப் படிப்பதன் மூலம், அதிகப்படியான விஷயம் அவனுக்குப் போகலாம். வாசகன் படைப்பாளியை நேரில் பார்ப்பது, படைப்பாளி வாசகனை நேரில் பார்ப்பது, பல சமயங்களில் படைப்பைத் தெரிந்துகொள்ளக் குறுக்கீடாக இருக்கும் என்னும் எண்ணங்கூட எனக்கிருக்கிறது. படைப்பாளியுடனான நேர் சந்திப்புகள் மூலம் அவனைப் பற்றிய படிமங்கள், மயக்கங்கள் ஏற்படுவது, அவனிடம் இருக்கும் சில்லரைத் தனங்களை வாசகன் தெரிந்துகொள்வது ஆகியவை பல சமயங்களில் படைப்பைப் பற்றிய உயர்வான அபிப்பிராயத்துக்குக் குறுக்கீடாகக்கூட இருக்கும்.
விலகியிருந்து வாசகர்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள், தெரிந்துகொள்கிறார்கள் என்று பார்ப்பது தான் நல்ல முடிவு, சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். சின்ன வயதிலேயே இந்த மாதிரியான முடிவுக்கு வந்துவிட்டேன். இதுதான் சரியான முடிவு, இதற்கு மேற்பட்ட முடிவு கிடையாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை.

இப்படியெல்லாம் நான் சொன்ன பின்னர்கூட வாசகர்களைப் பார்க்கும் சமயத்தில் சில விஷயங்கள் நடக்கின்றன. ஒரு வாசகன் வந்து பாராட்டிப் பேசுகிறான். சொல்லப் போனால் நமக்கு அந்தப் பாராட்டுக்கான தகுதி இல்லை. அந்தளவுக்குப் பேசிவிடுகிறான். அப்போது அதிக சந்தோஷம் கிடைக்கிறது. அந்தச் சந்தோஷம் ஊக்கம் தருகிறது. அவன் திடீரென்று பல விஷயங்களைப் பேசுகிறான். நான் படைப்புதான் முழுமை என்று சொல்லிக்கொண்டிருந்தால்கூட அந்தச் சந்தர்ப்பத்தில் படைப்பிலுள்ள சில நுட்பங்களை அவனுக்குச் சொல்ல முயல்கிறேன். படைப்பில் இருக்கக்கூடிய பல குறைகளை அவன் மூலம் நான் தெரிந்துகொள்கிறேன். அப்போது எனக்கும் அவனுக்கும் ஒரு உரையாடல் உருவாகிறது. இது படைப்பாளிக்குத் தேவையான ஒரு விஷயமாகவும் இருக்கிறது. நம்பிக்கை அப்படியிருக்கிறது. நடைமுறையில் இப்படித் தேவையும் இருக்கிறது. அதனால் உங்களைப் பார்ப்பதில் சந்தோஷமில்லை உங்கள் அபிப்ராயங்களைத் தெரிந்துகொள்வதில் விருப்பமில்லை என்று எண்ண வேண்டியதில்லை. அப்படி இல்லவே இல்லை. சொல்லப் போனால் படைப்பாளி வாசகன் மூலமாகத் தான் சமூகத்துக்குள் நுழைய முடியும். எழுத்து என்பது ஒரு சமூகச் செயல்பாடு. படைப்பு என்பது ஒரு சமூகச் செயல்பாடு.

நான் ஒரு டயரி எழுதிக் கொண்டிருக்கிறேன். மனைவிக்குக் கூடத் தெரியாது. என் குழந்தைகள் அதைப் படித்ததில்லை. நான் அதில் என் வண்டவாளங்களையெல்லாம் எழுதியிருக்கிறேன். அது படைப்பு அல்ல. ஏனெனில் அந்த டயரிக்கு வாசகனே இல்லை. நான்தான் டயரி எழுதுகிறேன். நான்தான் படிக்கிறேன். அதற்கும் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னுடைய காலத்துக்குப் பின்னர் யாரோ ஒருவர் அந்த டயரியைப் படித்து, வண்டவாளங்களுக்கு மேலாகச் சில விஷயங்களும் இருக்கின்றன என்னும் நம்பிக்கையில், அச்சடிக்கிறான். அச்சுப் போடும் நேரத்தில் அது ஒரு சமூகச் செயல்பாடாகிறது. யாரும் அதைப் படித்துப் பார்க்கலாம். இந்த ஆள் என்னவெல்லாம் எழுதி வச்சிருக்கான் பாருங்க, இவனப் பத்தி உயர்வா நினைச்சுக்கிட்டிருந்தோம்; ஒழுங்கான ஆள் மாதிரி வேஷம் போட்டிடுக்கான், என்றெல்லாம் விமர்சிக்கலாம். யார் வேண்டும் என்றாலும் அந்த டயரியைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை இருக்கிறது. இதுதான் அந்தச் சமூகச் செயல்பாட்டில் இருக்கக்கூடிய சமத்துவம் சார்ந்த பேரழகு. பேரழகு ஒன்று அதில் இருக்கிறது.

நான் ஒரு புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டேன் எனில் அவன் அந்தப் புத்தகத்தின் மேல் அவன் விரும்பக்கூடிய விமர்சனத்தை வைக்கலாம். யாரும் அந்தப் புத்தகத்தை படித்துவிட்டு நீங்க நல்லா எழுதியிருக்கீங்க, நல்லா எழுதல, குழப்பமாயிருக்கு, ஆட்களைப் போட்டுக் குழப்பாதீங்க, உங்க மூளையிலே பயங்கரமான ஒரு கோணல் ஒண்ணு இருக்கு என்றெல்லாம் பேசுவதற்கான ஒரு உரிமை வந்துவிடுகிறது. நான் உனக்காக இந்தப் புத்தகம் எழுதவில்லை, கெட்டிக்காரனுக்காகத்தான் எழுதியிருக்கிறேன், ரொம்ப மூளை உள்ளவனுக்காகத் தான் எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவையெல்லாம் அபத்தமான பேச்சு. யாருக்கெல்லாம் படிக்கத் தெரியுமோ அவர்களுக்காகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’, ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ என்னுடைய சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள் எல்லாம் யாருக்கெல்லாம் தமிழ் படிக்கத் தெரியுமோ அவர்களுக்காகத்தான் எழுதப்பட்டிருக்கின்றன. அவன் விரும்பக்கூடிய எந்த விமர்சனத்தையும் வைக்கலாம். அதை எந்த நேரத்திலும் வைக்கலாம். நான் தெருவிலே போய்க்கொண்டிருக்கும் சமயத்தில், ‘கொஞ்சம் நில்லுங்க சார். ஒரு விஷயம் பேச வேண்டியிருக்கு’ என்று பேச ஆரம்பித்து ஒரு விவாதத்தை உருவாக்கலாம். அவன் சொல்ல வேண்டியது, நான் கேட்க வேண்டியது. நான் பதில் இருந்தால் சொல்லுவேன். இந்தச் சமூக செயல்பாடு மிக முக்கியமானது.

சின்ன வயதில், பத்தொன்பது, இருபதுவயதில் எனக்குப் பல்வேறு பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரிய அளவு அறிவு கிடையாது. பெரிய அளவுக்குப் படிப்பு கிடையாது. மூளை அது பாட்டிலே யோசிக்குது. புதுசா பல பிரச்சினைகளை அது கிளப்பி விட்டுட்டேயிருக்கிறது. ஒன்று தெரிகிறது, ஒருவன் தொடர்ந்து புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கிறான். நாற்பது ஐம்பது வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறான். ஐம்பது அறுபது நாவல்கள், ஆயிரம் இரண்டாயிரம் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுகிறான். வயதாகிக்கொண்டிருக்கிறது. அவன் கண் முன்னாலேயே ஒவ்வொரு புத்தகமாக இறந்துபோய்க்கொண்டிருக்கிறது. அவன் இருக்கிறான் என்னும் ஞாபகமே சமூகத்துக்கு இல்லை. இப்படிப் புத்தகங்கள் எழுதியவன் தொண்ணூறு வயதிலே வீட்டுக்குள்ளே உட்கார்ந்திருக்கிறான் என்னும் ஞாபகமே இல்லை. ரொம்ப நாள் இருந்தோம் எனில் பிள்ளைகள் எல்லாம் ஒவ்வொன்றாகச் சாக ஆரம்பித்துவிடும். பிள்ளைகள் சாவதைப் பார்த்துவிட்டு, மனைவி சாவதைப் பார்த்துவிட்டு, சிலசமயம் பேரன் பேத்திகள் சாவதைப் பார்த்துவிட்டுச் சில கிழவர்கள் போய்ச்சேர்வார்கள். சில சமயங்களில் இவன் முதலில் போய்விடுவான். பின்னால் இவன் உருவாக்கிய படைப்புகளும் ஒவ்வொன்றாக சாக ஆரம்பித்துவிடும்.

ஆனால் சிலரைப் பொறுத்தவரையில் அவர்கள் இருக்கும் காலத்திலும் அவர்களது புத்தகங்கள் இருக்கின்றன. அவர்கள் மறைந்ததுக்குப் பின்னாலும் புத்தகங்கள் இருக்கின்றன. டால்ஸ்டாய் மறைந்ததற்கு பின்னாலும் அவர் புத்தகங்கள் இருந்துகொண்டிருக்கின்றன. உலகத்தில் எல்லா மொழிகளிலேயும் அவர் புத்தகங்கள் இருக்கின்றன. யாரோ நான்கு பேர் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலே எல்லாரும் விழுந்து, விழுந்து படிக்கிறார்கள் என்று சொல்லவில்லை. யாரோ நான்கு பேர் படிக்கிறார்கள். யாரோ ஒருவன் அன்னா கரீனினாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பான், புத்துயிர்ப்பு பற்றிப் பேசிக்கொண்டிருப்பான். யாரோ ஒருவன் சிறுகதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பான். ஒருவன் எழுதிய ஒரு வருஷத்துக்குள் படைப்புரீதியாக இறந்துவிடுகிறான். இன்னொரு புத்தகம் காலத்திலே தொடர்ந்து பிரயாணம் செய்கிறது. அதனுடைய சாராம்சம் என்ன, சூட்சுமம் என்ன?

நான் எழுதிய கதை சாயங் காலமே இறந்துவிடுமானால் நான் எதற்குக் கதை எழுத வேண்டும்? ஒரு கவிதை அல்லது ஒரு கட்டுரை எழுதியவுடனே இறந்துவிடுமானால் நான் எதற்காக அதை எழுத வேண்டும்? மறுநாள் சாகக்கூடிய ஒரு கவிதையையோ கட்டுரையையோ நான் ஏன் எழுத வேண்டும்? என்னும் கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் அதற்குள் ஏகப்பட்ட உழைப்பு உள்ளது, சங்கடங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் மேற்கொண்டு இரண்டு நாள்கள்கூட வாழாத படைப்புகளைத் தொடர்ந்து உருவாக்க வேண்டுமா? அதே சமயத்தில் சில படைப்புகள் நூறு, இருநூறு முன்னூறு வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அதனுடைய சூட்சுமம் என்ன என்பதுதான் ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை இலக்கிய விமர்சனத்தில் கேட்கப்படும் அடிப்படையான கேள்வி.

யோசிக்கும் சமயத்தில் ஒன்று தெரிகிறது. ஒரு படைப்பு ஒரு கருத்தை மட்டுமே - கருத்தைச் சொல்லக் கூடாது என்று அர்த்தமல்ல - வலியுறுத்தக்கூடிய காரியத்தைச் செய்யுமானால் அந்தப் படைப்புக்கு ஆயுள் குறைவு என்று நினைக்கிறேன். அந்தப் படைப்பு உருவாவதற்கு முன்னாலேயே அந்தக் கருத்து வெளி உலகத்தில் இருக்கிறது. அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதே என்பது ஒரு கருத்து. அதைச் சார்ந்து ஒரு சிறுகதை எழுதுகிறேன். அதைப் படித்துவிட்டு நண்பர்கள் சொல்கிறார்கள். நீ ஒரு கதை எழுதியிருக்கிறாயே. அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதேன்னு, என்று சொன்னால் என்னைப் பொறுத்தவரையிலே அது ஒரு படைப்பில்லை. ஏனெனில் அந்தக் கதை உருவாவதற்கு முன்னாலேயே அந்தக் கருத்து சமூகத்தில் இருக்கிறது. அந்தக் கருத்தைத் தூக்கி நான் ஒரு படைப்புக்குள் வைத்திருக்கிறேன். எதற்காக அவன் அதைப் படிக்க வேண்டும்? இப்படி உருவாக்கப்படும் படைப்புக்கும் மனுஷனுக்கும் தொடர்பில்லை. அவனுக்கு ஏற்கனவே இருந்த அனுபவத்தை இது விரிவுபடுத்தவில்லை.

இது அவனுக்கு எந்தவிதமான ஆழமான சிந்தனையையும் கொடுக்கவில்லை. ஆகவே படைப்பு என்பது ஒரு புதிய விஷயம். கருத்து சார்ந்தும் மொழி சார்ந்தும் வடிவம் சார்ந்தும் உத்தி சார்ந்தும் புதிதான விஷயம். படைப்பு என்றாலே புதிது புதிதான விஷயம். ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை பிறப்பதற்கு முன்னர் கோடிக்கணக்கான குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் இந்தக் குழந்தை இப்போதுதான் பிறந்திருக்கிறது. இதற்கு முன்னர் பிறக்கவேயில்லை. பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சிவப்பாக, கருப்பாக இருக்கக்கூடிய குழந்தை பிறந்திருக்கிறது. ஜாடை ஒரே மாதிரி. ஆனால் இந்தக் குழந்தை இதற்கு முன்னர் பிறக்க வேயில்லை. ஒவ்வொரு படைப்பும் புதிதானது. இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை உருவாக்கினால்தான் வாசகன் நினைப்பான், இது புதிதாக இருக்கிறதே, இதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், சொந்தமாக்க வேண்டும் என்று அவன் சொந்த மாக்கிக்கொள்கிறான். நான் சொந்த மாக்கிக்கொள்கிறேன். தொடர்ந்து ஒரு ஈர்ப்பை அந்தப் படைப்பு தந்து கொண்டிருக்கிறது. அந்த ஈர்ப்பை என் மகனுக்குக் கொடுக்கிறது. என் பேரக்குழந்தைக்குக் கொடுக்கிறது. அப்படித்தான் ஒரு படைப்பு காலத்தில் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

படைப்புக்குத் தன்னளவில் உயிரே கிடையாது. அது ஒரு பிணம். டால்ஸ்டாயுடைய ‘அன்னா கரீனினா’ என்னும் நாவல் ஒரு பிணம். அந்த நாவலுக்கும் இந்த உலகத்திலிருக்கக்கூடிய மிருக ராசிகளான சிங்கம், கரடி, புலி இவற்றிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மற்றபடி தாவர வர்க்கங்களுக்கும் அந்த நாவலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால் என்றாவது மனிதன் என்பவன் அதைத் தொடக்கூடிய சமயத்தில் அதற்கு உயிர் வருகிறது. ஏனெனில் அவன் படிக்கக்கூடியவன். சிந்திக்கக்கூடியவன். அந்தப் பக்கங் களைப் புரட்டி ஒரு பயணத்தை - வாசிப்பு என்னும் பயணத்தை - நிகழ்த்தி ஒரு அபிப்பிராயத்தைக் கூறக்கூடியவன். அப்போதுதான் அந்தப் புத்தகத்துக்கு உயிர் வருகிறது. இந்தக் கருத்துகளையெல்லாம் ‘ஜே.ஜே: சில குறிப்புக’ளில் சொல்லி யிருக்கிறேன்.

இப்படி யோசித்தவுடன் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது, படைப்புக் குள் எண்ணற்ற கூறுகள் இருக்கின் றன; எண்ணற்ற ரகசியங்கள் இருக்கின்றன. நீங்கள் தொழில்படத் தொழில்பட ரகசியங்கள் ஒவ்வொன் றாக உங்களுக்கு, படைப்பாளிக்கு, தெரிந்துகொண்டேயிருக்கிறது. அது படைப்பில் மட்டுமல்ல. சாதாரண உழவு வேலை செய்பவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், துணிமணி தைப்பவர்கள் எல்லாருக்குமே தங்களுடைய ஆக்கம் சம்பந்தமாக ஆழ்ந்த ரகசியங்கள் தெரியும். பெண் களுக்குச் சமையல் சம்பந்தமாக ஆழ்ந்த ரகசியங்கள் தெரியும். அவற்றிலே ஒரு பாதியைத்தான் மொழியிலே சொல்லமுடியும். மறுபாதியைச் சொல்லமுடியாது. குழந்தைகளிடம் நீ அம்மாவைப் பார்த்துக் கற்றுக்கொள் என்று சொல்கிறோம். பாதி விஷயந்தான் சொல்லிக்கொடுக்க முடியும். பாதி விஷயத்தைத் தானே கற்றுக்கொள்ள வேண்டியதுதான். இப்படிப்பட்ட ஆழ்ந்த ரகசியங்கள் அந்தப் படைப்பிலே இருக்கின்றன. இதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டவுடனே படைப்பைப் பற்றியும் சில விஷயங்கள் சொல்ல ஆரம்பிப்பேன். அப்போது இவற்றையெல்லாம் நான் வற்புறுத்துகிறேன். படைப்பை உள்ளடக்கம், வடிவம் என்று பிரிப்பதில் எனக்குச் சம்மதம் கிடையாது.

உத்தி உருவம், உள்ளடக்கம், ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு எல்லாம் கூடி முயங்கித்தான் படைப்புக்குள் இருக்கிறது. தனித்தனியாகப் பிரிந்து இல்லை. ஆனால் நடைமுறை வசதிக்காக உருவம், உள்ளடக்கம், மொழி என்று பிரித்து வைக்கிறோம். இதெல்லாம் ஒன்றாக இணையக்கூடிய சமயத்தில் ஒரு மகத்தான ஆற்றல், அந்த இணைப்பு மூலம் அந்தப் படைப்புக்குள் உருவாகிறது. அந்த ஆற்றல்தான் மிக முக்கியமான விஷயம் என்று நினைத்தேன். என்னுடைய விமர்சனம் எதைச் சொல்லும்? இந்தப் படைப்பில் கூடி முயங்கி வந்த ஆற்றல் இல்லை என்று சொல்லும். இன்னொரு படைப்பில் அந்த ஆற்றல் இருக்கிறது என்று சொல்லும், இதுதான் என்னுடைய அளவுகோல்.

நீ யாரு, என்ன ஜாதி, எந்த மதம் நீ இந்தியனா இல்லை அடுத்த தேசத்தைச் சேர்ந்தவனா, நீ சிவப்பாக இருக்கிறாயா கருப்பாக இருக்கிறாயா, இந்த ஊரா பக்கத்து ஊரா, எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் - இவையெல்லாம் எனக்குப் படைப்பைப் பொறுத்தவரை பிரச்சினையே கிடையாது. படைப்பு இதற்கு அப்பாற்பட்ட ஒரு நாகரிகம். இதற்கு அப்பாற்பட்ட ஒரு கலாச்சாரம். இதற்கு மேம்பட்ட ஒரு சமத்துவமான பார்வை இதற்கு மேம்பட்ட ஒரு உன்னதம் என்னும் அடிப்படையிலே படைப்பு. அந்தப் படைப்பை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டு, இது சரியாக வந்திருக்கிறது, சரியாக வந்திருக்கிறதெனில் காலத்தில் நிற்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது. மனிதன் படிப்பதற்கான யோக்கியதையைப் பெற்றிருக்கிறது. வாசகன் இந்தப் படைப்பை அரவணைத்துக்கொள்வான் என்று நம்புகிறேன். இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு போகும் என்று நம்புகிறேன். இதுதான் அதற்கு அர்த்தம். வேறொன்றுமில்லை. இந்த ஒரு விஷயம் ஏகப்பட்ட பிரச்சினையை உருவாக்குகிறது. ஒரு படைப்பிலிருக்கக்கூடிய ஆற்றல், ஆற்றல் அவசியம், அந்த ஆற்றல் இருந்தால்தான் காலத்தில் போகமுடியும். காலத்தில் போவதும் சமூகத்துக்குள் போவதும் ஒன்றுதான். வாசகன் மனதுக்குள் போவதைத் தான் காலத்தில் போவது என்று சொல்கிறேன்.

வாசகர்களுடைய மனதுக்குள் போக வேண்டும். மனதைப் பாதிக்க வேண்டும். வாசகனுடைய மனதைப் பாதித்தால்தான் சமூகத்தைப் பாதிக்க முடியும். சமூகம் என்று ஒன்று தனியாக இல்லை. படைப்பாளிக்குச் சமூகம் எங்கிருக்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அவனுக்கு இருக்கிறார்கள் ஐந்தாயிரம் வாசகர்கள். நான் ஐம்பது வருடங்களாக எழுதி ஐந்தாயிரம் வாசகர்களைச் சம்பாதித்திருக்கிறேன். பத்தாயிரம் வாசகர்களை அல்லது பதினைந்தாயிரம் வாசகர்களைச் சம்பாதித்திருக்கிறேன். இவர்களோடுதான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் யாரும் என் புத்தகங்களைப் படிக்கவில்லை. இன்னொரு மொழியிலே அது மலையாள மொழியாக இருக்கலாம், அல்லது கன்னட மொழியாக இருக்கலாம், மூணு வருடங்களில் என்னைப் போன்ற ஒரு படைப்பாளி ஏகதேசம் என்னைப் போன்றே எழுதக்கூடிய படைப்பாளி, நான்கு லட்சம் வாசகர்களை அடைந்துவிடலாம். என்னைப் போன்ற ஒரு படைப்பாளி தமிழ்ச் சமூகத்தில் இயங்கிக்கொண்டிருந்தால், நாற்பது ஐம்பது வருடங்கள் சோர்வில்லாமல் பிடிவாதமாக இயங்கிக்கொண்டிருந்தால், என்ன சொன்னாலும் சரி, இந்த விஷயத்தைத்தான் நான் செய்வேன், இதுதான் என்னுடைய நம்பிக்கை என்று தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் நாற்பது, ஐம்பது வருடங்களில் பத்தாயிரம் பதினைந்தாயிரம் வாசகர்களை அடையமுடியும்.

முக்கியமாக இடதுசாரிச் சிந்தனை உள்ள எழுத்தாளர்களுக்கும் எனக்கும் ஏகப்பட்ட கருத்து வேற்றுமையை உருவாக்கிய ஒரு விஷயம், மொழிக்கிருக்கக் கூடிய, படைப்புக்கிருக்கக்கூடிய ஆற்றல். இந்த ஆற்றல் இல்லையெனில் படைப்பென்று சொல்லிப் பிரயோஜனமில்லை. ஏனெனில் என்னுடைய நோக்கமும் சமூகத்தை அடைவதுதான். உங்களுடைய நோக்கமும் படைப்புகளின் மூலம் சமூகத்துக்குள் போவதுதான். அப்படிச் சமூகத்துக்குள்போவது தான் உங்களுடைய நோக்கமாக இருக்குமெனில், படைப்பு ஒரு அலங்காரப் பொருள் என்று நீங்கள் கருதாதபட்சத்தில், அந்தப் படைப்புச் சமூகத்தில் சலனத்தை உருவாக்க வேண்டுமானால் சில கூறுகள் அந்தப் படைப்புக்குள் வந்தாக வேண்டும். அந்தக் கூறுகளுக்கான பயிற்சி, சிரமங்கள், கஷ்டங்கள் எல்லாவற்றையுமே படைப்பாளி அடைந்தாக வேண்டும். குறுக்கு வழி எதுவுமே கிடையாது. எந்த ஆசிரியனும் ஒரு படைப்பைத் திறம்பட அமைப்பதற்குக் குறுக்கு வழியைச் சொல்லித் தரவே முடியாது. உன்னுடைய சொந்த வழி மூலந்தான் படைப்பை அடைய முடியும்.

இந்த மாதிரி சிந்தனைகளைச் சொல்லக்கூடிய சமயத்தில், அதற்கும் கலை கலைக்காக, கலை மக்களுக்காக என்னும் ஸ்லோகத்துக்கும் சம்பந்தமே கிடையாது. இடதுசாரிகள் கலை மக்களுக்காக என்று சொன்னால் நான் கலை வாசகர்களுக்காக என்று சொன்னேன். மற்றபடி எந்த வித்தியாசமும் கிடையாது. இந்த மாதிரியான விஷயங்களைத் தொடர்ந்து சொல்லும் சமயத்தில் அதனுடைய நுட்பங்கள் சார்ந்து புரிந்துகொள்வதற்குத் தவறுவதாலும், ஒரு எழுத்தாளனுடைய எண்ணங்களை அவனுடைய எழுத்தைச் சார்ந்து உருவாக்காமல் அவனுடைய பிம்பங்களைச் சார்ந்து உருவாக்கிக்கொள்ளக்கூடிய பழக்கம் தமிழ்ச் சூழலில் இருப்பதாலும், வாசகர்களுக்கும் எழுத்தாளனுக்கும் இடையில் எவ்வளவோ தவறான எண்ணங்கள் உருவாகி வந்திருக்கின்றன. காலப் போக்கில் இந்தப் பிம்பங்களெல்லாம் அழிந்துபோய் இதன் பின்னால் இருக்கும் மனித உருவம் அழிந்துபோய் இந்தப் படைப்பு மட்டுமே முன்னிலையில இருக்கக்கூடிய காலக் கட்டத்தில், படைப்பை மட்டுமே வைத்து அவன் என்ன எழுதியிருக்கிறான் என்ன சொல்லியிருக்கிறான் என்பதை வைத்து மறுபரிசீலனை செய்யக்கூடிய ஒரு காலம் உருவாகலாம் என்று நான் நம்புகிறேன்.

உங்களிடம் பேசக்கூடிய சமயத்தில் உங்களுக்குக் கவனமிருக்கக்கூடிய அக்கறை இருக்கக்கூடிய நீங்கள் கவலைப்படக்கூடிய விஷயத்தைப் பற்றி நான் ஏதாவது சொன்னால் தான் அதைப் பற்றி நீங்கள் யோசிக்க முடியும். பல்வேறுபட்ட விஷயங்களிலே எனக்கு அக்கறை இருக்கலாம். உங்களுடைய கவனம் எந்த விஷயங்களில் பதிந்திருக்கிறதோ அதைச் சார்ந்திருந்து நான் பேசத் தொடங்கினேன் என்றால் நீங்கள் அந்த விஷயத்தைக் கவனிக்கத் தொடங்குவீர்கள். அது பற்றி நீங்கள் யோசிக்கலாம். விவாதிக்கலாம். சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளலாம். மொத்த விஷயங்களையுமே இவர் சொன்னது சரியில்லை என்று நிராகரித்துவிடலாம். அதற்கெல்லாம் உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதையெல்லாம் யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.

யதார்த்தம் என்பது பற்றி நாம் பேசினோம் எனில் உங்களுக்கு அதில் கவனம், அக்கறை இருக்கும். தமிழ்ச் சூழலில் அது முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது என்று நினைக்கிறேன். எதார்த்தம் என்பது பற்றி பேசக்கூடிய சமயத்தில் அதை ரொம்ப சூட்சுமமாகப் பேசுவதைவிட்டு நடைமுறை சார்ந்து பேசினோம் எனில் சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. யதார்த்தமும் நாவலும் என்று இணைத்துக்கொண்டு பேசினோம் எனில் உதாரணபூர்வமாக யோசித்து நாம எந்த நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்னும் தெளிவை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்படலாம். இப்போது எதார்த்தம் சம்பந்தமாக இடதுசாரிச் சிந்தனையாளருக்கு, இடதுசாரிப் படைப்பாளிகளுக்கு ஒரு கவலை இருக்கிறது என்று நினைக்கிறேன். யதார்த்தம் அழிந்துபோய்விடுமோ என்னும் கவலை, நெருக்கடி அவர்களுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட கவலையொன்றும் எங்களுக்கு இல்லை என்று அவர்கள் சொன்னால்கூட உங்களுக்குக் கவலை அதிகமாக இருக்கிறதென்று நான் சொல்வேன். ஏனெனில் நான் எந்த விஷயத்தைப் பற்றிக் கவலைப்படுகிறேனோ, அது பற்றி என் நண்பன் வந்து நீ ஏன் கவலைப்படுகிறாய் என்று கேட்டால் நான் அதுபற்றிக் கவலைப்படவேயில்லையென்றுதான் சொல்வேன். எனக்கு என்ன சுபாவமிருக்கிறதோ அப்படித்தான் உங்களுக்கும் இருக்கும் என்பது என் கணக்கு. இதை நீங்க ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் ஏற்றுக்கலாம். இல்லை நாங்கள் கவலையே படவில்லை என்று சொன்னால் இன்னும் அதிகமாகக் கவலைப்படுகிறீர்களோ என்று சந்தேகப்படத் தொடங்குவேன். இதுதான் என்னுடைய இயற்கை. நான் என்னும் மனிதனுக்கு எக்கச்சக்கமான பலவீனங்கள் இருக்கின்றன. அந்தப் பலவீனங்கள் சார்ந்து இப்படித்தான் நான் அந்த விஷயங்களைப் பார்ப்பேன்.

என்னை அடிக்கடி பார்க்க வரக்கூடிய நண்பர், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் என்னைப் பார்க்க வந்தபோது எதார்த்தம் செத்துவிட்டது என்றார். நீங்கள் அது என்ன ஜாதி என்ன மதம் என்று தெரிந்துகொண்டு வந்தீர்கள் எனில் அதை நாம் புதைக்க வேண்டுமானால் புதைக்கலாம், எரிக்க வேண்டுமானால் எரிக்கலாம். அதற்கு என்ன வேண்டுமோ அதைச் செய்துவிடலாம் என்றேன். பேசாமல் போய்விட்டார். அடுத்த வாரம் நான் தெரு வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். கொஞ்சம் நில்லுங்க என்றார். எதார்த்தம் செத்துப்போயிடுச்சுங்க என்றார் கொஞ்சம் ஆவேசமாக. நான் அன்றே சொன்னேனே. தகவலை விசாரித்துவாங்க. அதற்கு எப்படி வேண்டுமோ அப்படிச் செய்துவிடலாம். அதற்கு நான் தயாராகத்தான் இருக்கிறேன். எதார்த்தத்தோடு குழந்தை நான்தான் என்று கற்பனை செய்துகொண்டு நானே அந்தக் காரியத்தை எல்லாம் செய்கிறேன் என்றேன். போய்விட்டார். இரண்டு வாரங்கள் கழித்து திரும்ப வந்து அதையே சொன்னார். நீங்கள் அடிக்கடி வந்து யதார்த்தம் செத்துப் போச்சு என்று சொல்லும் சமயத்தில் எனக்கு யதார்த்தம் செத்துப் போகவில்லையோ என்னும் சந்தேகம் வருகிறது. எங்கப்பா இறந்துபோனார் என்று ஒருதடவை நண்பர்களிடமெல்லாம் சொன்னேன். அடிக்கடி போய் எங்கப்பா இறந்துபோய்விட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தால் நான் அவரை எங்கேயோ ஒளித்துவைத்துக்கொண்டு மறைவாகப் பேசுகிறேன் என்று நண்பர்கள் சந்தேகப்படுவார்கள். யதார்த்தம் மேலே யாருக்கு ஆசை இருக்கிறதோ, அதுதான் என்னுடைய ஒரே இலக்கிய உருவம், என்னுடைய ஒரே இலக்கியத் தடம், அது இருந்தால்தான் உயிர் வாழ முடியும் என்று கற்பனை பண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு யதார்த்தம் செத்துப்போயிடுமோ என்று பயமாகயிருக்கிறது. யதார்த்தத்தைப் புதைக்க வேண்டும் என்று நினைத்திருப்பவனுக்கு அது சாகவில்லையோ, இன்னும் உயிரோடுதான் இருக்கிறதோவென்று கவலையாயிருக்கிறது. அந்தக் கவலை எனக்குக் கிடையாது. அந்தக் கவலை உங்களுக்கும் வேண்டியதில்லை.

என்ன வடிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதில் திட்டவட்டமாக நாம் எந்த முடிவுக்கும் வர வேண்டியதில்லை. இந்த மொழியிலே எழுத வேண்டுமென்பது என்னுடைய யோசனை இல்லை. நான் ஒரு பகுதியிலே பிறந்தேன். அந்தப் பகுதியிலே பேசக் கூடிய மொழி தமிழ் மொழி. அதனால் நான் தமிழில் எழுதுகிறேன். மிக முக்கியமான விஷயங்களெல்லாம் நீங்க தேர்வு செய்யக் கூடிய விஷயங்களே அல்ல. என் தாயையே நான் தேர்வு செய்யவில்லை, என் தகப்பனை நான் தேர்வு செய்யவில்லை. நான் எந்தக் பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்று நான் தேர்வு பண்ணவில்லை. என் பெயரை நான் தேர்வு பண்ணவில்லை. ஆனால் என்னுடைய படைப்பை நான்தான் தேர்வு பண்ணியிருக்கிறேன். என்னுடைய உள்ளடக்கங்களை நான்தான் தேர்வு பண்ணியிருக்கிறேன். என்னுடைய வடிவத்தை நான்தான் தேர்வு பண்ணியிருக்கிறேன். என்ன அடிப்படையில் தேர்வு செய்தால் எந்த விஷயத்தைச் சொன்னால் வாசகர்கள் அருகில் போகமுடியுமோ, அதிகமாக அதைச் சார்ந்து தேர்வு பண்ணியிருக்கிறேன்.

நான் ஏன் காவியம் எழுதவில்லை என்றால் நான் பிறந்த காலத்தில் காவியங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. காவியத்தின் இடத்தில் நாவல் வந்து உட்கார்ந்துகொண்டது. இப்போது நான் காவியத்தைப் பாட வேண்டுமா, நாவல் எழுத வேண்டுமா என்றால், நாவல் எழுதினால்தான் சமூகத்துக்குள் போகமுடியும். வாசகர்களை எட்டமுடியும். நான் எழுதக்கூடிய காலத்தில் சிறு கதைகள்தான் மிக முக்கியமான வடிவமாயிருக்கின்றன. அந்த வடிவத்தை நான் எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் எனக்கு வாசகர் தொடர்பு மிக முக்கியம். வாசகர் தொடர்பு தான் சமூகத் தொடர்பு. ஏதோ காரணத்தால் தமிழர்கள் சிறுகதை படிப்பதையே விட்டுவிட்டார்கள். எவ்வளவு அற்புதமான சிறுகதை என்றாலும் படிக்க மாட்டார்கள். நாவல்தான் படிப்பார்கள் என்றால் சிறுகதைகளில் என்னன்ன விஷயங்கள் சொல்லி வந்திருக்கிறேனோ அத்தனை விஷயங்களையும் நாவலில் சொல்ல முயல்வேன். முடியலாம், முடியாமல் போகலாம். தொடர்ந்து முயல்வேன். ஏனெனில் நான் என் முயற்சியைவிட முடியாது. அப்படி விடுவது ஒரு எழுத்தாளன் செய்துகொள்ளக் கூடிய தற்கொலைக்குச் சமானம்.

ஏதோ காரணத்தினால் கவிதைகளே படிக்கவில்லையென்றால் கவிதை எழுதுவதைச் சுத்தமாக நிறுத்திவிட்டுக் கவிதையிலே என்னென்ன சொல்ல ஆசைப்படுகிறேனோ அவற்றையெல்லாம் சிறுகதையில் கொண்டுவர முயற்சி மேற்கொள்வேன். ஆனால் ஒரு வடிவம் சார்ந்து, தளம் சார்ந்து ஒரு படைப்பாளியைக் கொல்லவே முடியாது. அவன் படைப்பை மாற்றிக்கொண்டேபோவான். சிறுகதை எழுதலாம் இல்லை நாவல் எழுதலாம். நாடகம் எழுதலாம். எதுவுமே எழுதக் கூடாது எனில் பேசத் தொடங்குவேன். பேசுவதன் மூலம் என்னுடைய கருத்துகளைச் சொல்ல முடியும். புதிய வடிவங்களை உருவாக்க முடியும். இதற்கெல்லாம் சாத்தியக் கூறு இருந்துகொண்டிருக்கிறது. இரண்டாவது, நம்முடைய நூறு வருட மரபில் படைப்புக்கு முக்கியமான தளம் யதார்த்தத் தளந்தான். இது நடைமுறை உண்மை. யதார்த்தத்துக்கு வக்காலத்து வாங்கவில்லை. அதை ஆதரித்துப் பேசவில்லை. நடைமுறையில் இந்த நூறு வருடங்களும் ஒரே விஷயம் சேர்ந்ததல்ல. யதார்த்த தளம் என்பது திட்டவட்டமாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிடவில்லை. மனிதன் சொல்வதுபோல். ஒரு மனிதன் மிகப் பெரிய சிந்தனையாளனாக இருப்பான். ஒரு மனிதன் சாதாரணமான குமாஸ்தா வேலை பார்த்துக்கொண்டிருப்பான். அவனும் மனிதன்தான். அது போல்தான் யதார்த்த நாவல்.

முதல் நாவல் அதிகளவுக்குத் தர்க்கரீதியான காரியங்களைச் சொல்லாமல் தர்க்கத்திற்கு வெளியே போய்ப் பல காரியங்களைச் சொல்வதாயிருக்கிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தில் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு பல விஷயங்களை - யதார்த்தத் தளந்தான் - சொல்லிக்கொண்டே போகிறார். பத்மாவதி சரித்திரத்தில் அதன் ஆசிரியர் மாதவையாவுக்கு மனிதனுக்கும் சமூகத்திற்குமுள்ள தொடர்பு முக்கியமானதாயிருக்கிறது. முதல் ஆசிரியர் (வேதநாயகம் பிள்ளை) ஒழுக்கந்தான் முக்கியம் என்று நினைக்கிறார். தனி நபருடைய ஒழுக்கம். ஒழுக்கத்துக்கும், அந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதற்கும் மீறுவதற்கும் சமூக ரீதியான பாதிப்பு ஒரு காரணம் என்று அவர் நினைக்கவில்லை. மனிதன் நல்லவனெனில் ஒழுக்கமாக இருப்பான். கெட்டவன் எனில் ஒழுக்கமில்லாமல் இருப்பான். இது ஒரு பாகுபாடு. அந்தப் பாகுபாட்டிலிருந்துதான் அந்த நாவலை உருவாக்குகிறார்.

அவருக்குப் பின்னர் எழுதிய மாதவையாவுக்கு ஒழுக்கம், உயர்வு எல்லாமே சமூகம் சார்ந்த சிந்தனை. சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் இருக்கக்கூடிய உறவிலிருந்துதான் ஒழுக்கம் வருகிறது. உன்னதமான எண்ணம் வருகிறது. நீங்கள் அவனைக் கடுமையாகச் சோதித்தீர்கள் எனில் தவறான காரியத்தைச் செய்வான். அப்படிப்பட்ட பல்வேறு இணைப்புக்களை மனிதனுக்கும் சமூகத்துக்கும் உருவாக்குகிறார். ராஜமையருக்குக் குடும்பம் முக்கியமான விஷயமாகப்படுகிறது. குடும்பம் சார்ந்து மனிதன் ஒரு நாகரிகத்தை உருவாக்கினால் தான் சமூகம் சார்ந்த ஒரு நாகரிகத்தை உருவாக்கமுடியும் எனும் செய்தி அவரிடம் இருக்கிறது. குடும்பத்துக்குள் சீரழிவு இருக்கிறது, ஒழுங்கில்லை, கட்டுப்பாடு இல்லை, உயர்ந்த சிந்தனையில்லையெனில் சமுதாயத்திலேயும் அவை இருக்காது என்பது அவருடைய முடிவு.

இந்த நாவல்கள் எல்லாமே யதார்த்தமான நாவல்களாகத்தான் இருக்கின்றன. இதையே மாற்றிப் போடலாம். எதார்த்தமான பார்வை வந்ததால்தான் நாவலே உருவாகியது என்றும் மாற்றிச் சொல்லலாம். அது தான் இன்னும் சரியான விளக்கம். மனிதனுடைய வரலாற்றில் ஒரு காலக் கட்டத்தில் அறிவியல்ரீதியான பாய்ச்சல் மூலம் சமூகத்தில் இருக்கக்கூடிய மூடநம்பிக்கைகள் ஒழிந்து சமூகத்தில் இருக்கக்கூடிய ஊடுபாவுகள் அவன் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியத் தொடங்குகின்றன. எந்தெந்த விஷயத்தில் ஆற்றல்கள் மறைந்து கிடக்கிறதோ அந்த ஆற்றலை வெளிப்படுத்திப் பல்வேறுபட்ட புதிய சக்திகளை உருவாக்க முடியும். மிக வேகமாகப் பயணஞ் செய்யக்கூடிய வாகனங்களை உருவாக்க முடியும். மிக வேகமாகப் புத்தகங்களை உருவாக்கக்கூடிய அச்சு இயந்திரங்களை உருவாக்க முடியும் என்பது அவனுக்குத் தெரியத் தொடங்குகிறது. எப்போது அறிவியல் முக்கியமான விஷயமாகிறதோ அப்போது வாழ்க்கை சார்ந்த தர்க்கம் முக்கியமான விஷயமாகிவிடுகிறது. நாவல் என்பது அடிப்படையில் தர்க்கம் சார்ந்த ஒரு படைப்பு. அதனுள் மூடநம்பிக்கையெனில் அதைப் பலமாகவோ பலவீனமாகவோதான் சொல்ல வேண்டுமேயொழிய எந்த விதமான பொறுப்பும் இல்லாமல் அதைச் சொல்ல முடியாது.

தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட எந்தக் கேள்வியையும் நாவலில் ஒரு குறையாகச் சொல்லலாம். குறையாகச் சொல்லிக்கொண்டே வருகிறார்கள் விமர்சகர்கள். அடிப்படையாக இது வாழ்க்கையில் இல்லையே என்று நாவலைப் பார்த்துக் கேட்கலாம். ஆனால் காவியத்தைப் பார்த்துக் கேட்கமுடியாது. ஒரே ஆள் ஆயிரம் பேரைக் கொன்றான் என்று சொல்கிறீர்கள். ஆனால் வாழ்க்கையிலே நடக்காதே என்று காவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்க முடியாது. காவியத்தில் இருக்கக்கூடியது கற்பனை சார்ந்த தளம். நாவலில் இருக்கக்கூடியது சமூகத் தளம். நாவலில் உள்ள எந்த விஷயத்தைப் படித்துவிட்டும் சாதாரண ஆள்கூட இந்த மாதிரி ஆசிரியர் சொல்கிறார், உலகத்தில் எங்கும் நடக்காதைய்யா, தமிழ்நாட்டில் எங்கும் நடந்ததில்லை, ஆசிரியர் கதைவிடுகிறார் என்று சொல்லலாம். வாழ்க்கை எப்படியிருக்கிறதோ அதைப் பிரதிபலிக்கக்கூடிய படைப்பாக நாவல் இருக்கிறது. அந்தளவுக்கு வாழ்க்கையிலே யதார்த்த தளம் அமலாயிட்டிருக்கிறதென்று அர்த்தம். எங்கள் ஊர் பற்றிக் கொஞ்சநாள் முன்னால் ஒரு நாவல் வந்தது. நாவலாசிரியர் பம்பாயில் எங்கேயோ இருந்திருக்கிறார். அவர் நாவலில் ஏதோ கவனக்குறைவால் கணவனும் மனைவியும் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்குவதாக எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில், ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நாகர்கோவிலில் ரயில்வே ஸ்டேஷனே கிடையாது. எல்லாரும் கேட்கிறார்கள் நாகர்கோவிலில் எப்படி ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்க முடியுமென்று. நியாயமான கேள்வி. அதற்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். சும்மா கதை விட்டேனெனச் சொல்ல முடியாது. பின்னர் ரயில்வே ஸ்டேஷன் வந்துவிட்டது. எனினும் அந்தக் குறை தீர்ந்து போகாது நாவலில். அவர் எழுதிய காலம் இருக்கிறதே, அதை மாற்றமுடியாது. இப்படி நீங்கள் பார்க்கக்கூடிய சமயத்தில் முழுக்க முழுக்க உலக விவகாரம் சார்ந்த, உலக விவகாரத்திலிருக்கக் கூடிய தர்க்கம் சார்ந்த படைப்பாக நாவல் இருக்கிறது. அந்தளவுக்கு எப்போது மனித சமுதாயத்துக்கு விழிப்பு நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் நாவல் என்கிற கலை வடிவமே உருவாகிறது. இந்த நாவல் என்னும் மகத்தான கலை வடிவந்தான் பல்வேறுபட்ட ஜனநாயகப் பண்புகளை உலகத்துக்கு உருவாக்கியிருக்கிறது. மற்ற மொழிகளிலும் சரி நமது மொழியிலும் சரி. நூறு வருடங்களல்ல நூற்றியிருபது வருடங்களாகிவிட்டன நாவல் தமிழில் தோன்றி. திட்டவட்டமாகக் கணக்குப் பார்த்தால் முன்னர் பின்னர் இருக்கலாம். நமக்கு ஞாபகப்படுத்திக்கொள்ள வசதியாக இந்த நூற்றி இருபது வருடங்களில் நான் பொருட்படுத்தக் கூடிய நாவல்கள் கிட்டத்தட்ட நூறாவது வந்திருக்கின்றன. ஒரு இளம் எழுத்தாளர் வந்து நான் என்னென்ன நாவல்கள் படிக்கலாமெனக் கேட்டால் இந்த நூறு நாவல்களைப் படிக்கும்படியாகச் சொல்வேன். அப்போதுதான் அவருக்கு மொத்தத்தில் என்ன காரியம் நடந்திருக்கிறது என்னும் விஷயம் தெரியும். இவற்றில் ஐம்பது நாவல்கள் மிக முக்கியமான நாவல்கள். அதில் இருபத்தைந்து முப்பது நாவல்களை இன்னும் முக்கியமானதாகக் கருதுகிறேன். இப்படித்தான் அதை நீங்கள் பாகுபாடுபடுத்திப் பார்க்க முடியும். இந்த நாவல்கள்தான் பல்வேறுபட்ட மனிதக் கூறுகளை நமது சமுதாயத்துக்கு உருவாக்கியிருக்கின்றன. ஜனநாயகக் கூறுகளை, மனித நேயம் சார்ந்த கூறுகளை, மனிதத் தன்மைகள் சார்ந்த கூறுகளை இந்த நாவல்கள்தான் வற்புறுத்தியிருக்கின்றன. 1940களின் தொடக்கத்தில் ஷண் முகசுந்தரம் எழுதிய ‘நாகம்மாள்’ ஒரு குறுநாவல். அதில் நாகம்மாள் என்று ஒரு கேரக்டர். பலர் படித்திருக்கலாம். கிராமத்தைச் சேர்ந்த அம்மா. அவர்தான் நாவலில் மையத்தில் இருக்கிறார். ஒரு படைப்பின் மையத்தில் எவ்வளவோ பேர் இருந்திருக்கிறார்கள். ராமன் இருந்திருக்கிறான். கிருஷ்ணன் இருந்திருக்கிறான். துரியோதனன் இருந்திருக்கிறான். அர்ஜுனன் இருந்திருக்கிறான். மிக உன்னதமான புருஷர்களெல்லாம் படைப்பின் மையத்தில் இருந்திருக்கிறார்கள். முதன்முதலாகச் சமுதாயத்திலிருக்கக்கூடிய ஒழுக்கம், அமுக்கக் டிய விஷயம் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளாத, மீறிப் போகக்கூடிய தன்னிச்சையான, தனக்காகவே சுதந்திரத்தை வரவழைத்துக்கொண்ட, என்னுடைய வாழ்க்கையை நான்தான் தீர்மானிப்பேன், நீ என்ன சொன்னாலும் நான் கவலைப்படமாட்டேன் என்னும் இயல்பு கொண்ட ஒரு பாத்திரம் - அதிலும் ஒரு பெண் பாத்திரம் - அந்த நாவலுடைய மையத்துக்கு வருகிறார். அந்த மாதிரி ஒரு நபர் வந்து ஊரிலிருந்தால் ‘ஒரு மாதிரியான கேஸ்’ என்று ஒதுக்கிவிடுவார்கள். ஊரில் அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லக்கூடிய அபிப்பிராயம். அபிப்பிராயம் என்பதைவிட ஒரு விமர்சனம் - எதிர்மறையான விமர்சனம் - இவர் மோசமான ஆத்மா, நல்ல ஆத்மா இல்லை என்று தொடர்ந்து திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அந்த விமர்சனத்தையே அவர் தலைமேல் வைத்துக் கட்டி அந்த விமர்சனத்துடைய ஒரு வடிவமாகவே பார்க்கக்கூடியது சமூகத்தில ஒரு பழக்கமாகப் போய்விட்டது. நாவலுக்குள் வரக்கூடிய சமயத்தில் என்ன ஏற்படுகிறது என்று பாருங்கள். நாவல் ஆசிரியர் இந்தப் பார்வையைத் தலைகீழாக மாற்றிப் போடுகிறார்.
அவர் அந்த நாவலை எழுத வந்ததற்கான காரணம் இவர் கூறுகெட்ட அம்மாவென்று சொல்வதற்கு அல்ல. இந்தக் கூறுகெட்ட அம்மாவுக்கும் கூறுள்ள அம்மாக்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதென்று சொல்கிறார். எந்த அம்மாக்களெல்லாம் உயர்வானவர்களென்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களோ அவர்களது மனிதத்தன்மை, அவர்களிடம் இருக்கக்கூடிய காதல், உறவுமுறை, திறமை, கெட்டிக்காரத்தனம், மனிதப் பண்பு எல்லாமே இவரிடமும் இருக்கிறது. இத்தனை விஷயங்கள் இருக்கும் சமயத்தில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே என்று அந்தப் பார்வையைத் திருப்பிப் போடுகிறார். பார்வையைத் திருப்பிப்போடுவதன் மூலம் உன்னதமான நாவல் என்று நீங்கள் சொல்வதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. ஓரம்கட்டப்பட்ட அம்மாக்கள் சமூகத்தில் மையத்துக்கு வந்துவிடுகிறார்கள். சமூகத்தோடு ஓரத்திலிருந்தவர் தட்டிக் கேட்கலாம், தட்டிக் கேட்பவர் ஆபீசுக்குள் உட்கார்ந்துவிட்டார். தட்டிக் கேட்பவர் கலெக்டராக வந்துவிட்டார். தட்டிக் கேட்பவர் ஆசிரியராக வந்துவிட்டார். யாருடைய பார்வை மாற்றம் அடைந்ததால் வந்தாங்க? அந்த ஆணித்தரமான, அடிப்படையான ஒரு வாதத்தை முன்வைத்து வாழ்க்கை சார்ந்த ஒரு தர்க்கத்தை முன்வைத்து இந்தப் பார்வையை மாற்றியது யாரு? நாவல் ஆசிரியர்தான் அந்தப் பார்வையை மாற்றினார். உலகம் முழுவதும் மனிதருடைய பார்வையை அடிப்படையாக மாற்றியதில் நாவல் ஆசிரியர்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றனர். நான் எப்படி ஒரு நாவல் ஆசிரியருடைய பார்வை சமூகத்தைப் பாதிக்கிறது - அந்த இணைப்பை மட்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டில் நாவல்களுடைய வரலாற்றை நான் சொல்லவில்லை. நூறு வருடங்களில் என்னென்ன நாவல்கள் வந்திருக்கின்றன, என்னென்ன நாவல்களை நீங்கள் படிக்கலாம் என்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. நாகம்மாளுக்குப் பின்னால் ஜானகிராமனுடைய இரண்டு நாவல்களை ஞாபகப்படுத்திக்கொள்ளலாம். ஒன்று ‘மோகமுள்’. மற்றொன்று ‘அம்மா வந்தாள்’. இரண்டு நாவல்களிலும் இரண்டு அத்துமீறல்கள் இருக்கின்றன. மோகமுள்ளில் தன்னைவிட அதிக வயது கொண்ட யமுனா என்னும் பெண்ணைப் பாபு என்பவன் காதலிக்கிறான். பாபவுக்கு வயது குறைவு. யமுனாவுக்கு வயது அதிகம். இதுதான் நாவலின் மையம். இவர் விஷயம் மோகமுள் எழுதுவதற்கு முன்னாடியே சமூகத்தில் உண்டா, இல்லை, இவர் மோகமுள் எழுதியதற்குப் பின்னர்தான் உருவாகியதா என்று கேட்டீர்களெனில், இவர் எழுதுவதற்கு முன்னரே வயதுக்கு மீறிய பெண்ணைக் காதலிக்கும் விஷயம் காலங்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாகம்மாள்களும் காலங்காலமாய்ச் சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கான பதிவு நிகழவில்லை. அந்தப் பதிவைத்தான் ஜானகிராமன் நிகழ்த்தியிருக்கிறார். நீங்கள் முதலில் படிக்கும் சமயத்தில் இந்த விஷயம் அருவருப்பாக இருக்கும். என்ன இது, ஒரு வயசுப் பையன் வயதுக்கு மீறிய பெண்ணைக் காதலிக்கிறானே என்று. ஆனால் நாவலைத் தொடர்ந்து படிக்கும் சமயத்தில் உங்களுடைய உணர்ச்சிக்கும் பாபுவுடைய உணர்ச்சிக்கும் நல்ல அளவுக்குப் பொதுவான உண்மைகள் இருக்கின்றன. அவனும் நம்மைப் போன்ற ஒரு மனிதன் என்பது வெளிப்படும். இந்த ஒரு விஷயம் நமக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பல்வேறுபட்ட விஷயங்களில் யமுனாவும் சரி பாபுவும் சரி, மிக உன்னதமான ஆட்களாகத்தான் இருப்பார்கள். நம்மைப் போன்ற ஆட்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த ஒரு அளவுகோலை மட்டுமே வைத்து அவர்களைச் சமூகத்திலிருந்து விலக்குவது தவறான விஷயம் என்னும் மனோபாவத்தை உங்களுக்குத் தெரியாமலே அந்தப் படைப்பாளி நானூறு ஐநூறு பக்கங்களில் உருவாக்கிவிடுகிறான். சமூகத்தில் இப்படியெல்லாம் இருக்கலாம். இதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அன்னா கரீனினாவிலேயும் இது தான் நடக்கிறது. அன்னாகரீனினாவில் அந்தம்மா தற்கொலை செய்து இறந்துபோகிறார். கணவன் இருக்கக்கூடிய சமயத்திலேயே வேறொருத்தனை நேசிக்கிறார். கடைசியிலே அந்த வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை அதன் அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார். தற்கொலை தவிர வேறெந்த முடிவும் எடுக்க முடியாத இடத்துக்குத் தள்ளப்படுகிறார். இன்று அதைப் போல் இருக்கிறதெனச் சொல்ல முடியாது. அவர் பக்கத்தில் ஒரு நியாயம் இருக்கிறதென்று சொல்லி ஆயிரம் பக்கங்கள் எழுதி ஒரு வாதத்தை முன்வைக்கிறார் டால்ஸ்டாய். கலைப்பூர்வமான வாதத்தை முன்வைக்கிறார். அந்த வாதத்தோடு நீங்கள் பயணம் செய்யும் சமயத்தில் மிகச் சிறந்த பெண்மணியாக அவர் உருவாகிறார். மட்டமாக, தவறாக, கீழ்த்தரமாக நீங்கள் கருதக்கூடிய பெண், மிகச் சிறந்த பெண்மணியாக உருவெடுக்கிறார். நான் ஆத்மார்த்தமாக யாரை நேசிப்பேனோ அவர்கூடத்தான் நான் வாழமுடியும், அதுதான் உண்மையான காதல் வாழ்க்கை, நம்முடைய வாழ்க்கையில் நாம் ஆத்மார்த்தமாக இல்லை என்பது அம்பலமாகிறது. நமது காதல் ஒரு பக்கமாகவும் நமது வாழ்க்கை இன்னொரு பக்கமாகவும் இருக்கிறது. நாம்தான் அந்த அம் மாவைப் பார்த்துத் தலை குனிய வேண்டியிருக்குதே ஒழிய நம்மைப் பார்த்து அந்தம்மா தலைகுனிய வேண்டிய நிலையில் இல்லை என்பது அந்த நாவலிலே உணர்த்தப்படுகிறது.

அடுத்ததாக ஜெயகாந்தனுடைய ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ என்னும் நாவல். அதில் ஹென்றி என்று ஒரு கேரக்டர். அவன் மொத்த சமூகத்துக்கும் வெளியில் இருக்கிறான். நீங்கள் உருவாக்கி வைத்திருக்கக்கூடிய ஒழுங்குக்குள் வரவில்லை. சாதாரணப் பழக்கங்கள் - குளிப்பது, பல் தேய்ப்பது, உடை உடுத்துவது, மற்றவர்களிடம் பழகுவது - இவற்றுக்கெல்லாம் சில அடையாளங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அடையாளங்களுக்குள் அவன் வரவில்லை. இந்த அடையாளங்களுக்குள் வராத மனிதனைப் பார்க்கும்போது நீங்கள் பயப்படுகிறீர்கள். ஒரு மாதிரியான ஆளாக இருக்கிறான். ஏதாவது தப்புத்தண்டா பண்ணிவிடுவான், எங்களிடம் இருக்கும் வாழ்க்கையையும் சீர்குலைத்துவிட்டுப் போய்விடுவான். இவனை வீட்டுக்குள் விடலாமா? நாம் வீட்டுக்குள் ஒரு ஒழுக்கத்தை கட்டி வளர்த்துக்கொண்டிருக்கிறோம், அதில் மாற்றத்தை உருவாக்கிவிட்டுப் போய்விடுவானோ என்று சந்தேகப்படுகிறீர்கள். அறிந்தோ அறியாமலோ சமூகத்திலிருந்து ஒரு ஓரத்தில் ஒதுங்கிவிடுகிறான். அவனுக்குக் கிடைக்கக்கூடிய நண்பர்கள் குறைவாகப் போய்விடுகிறார்கள்.

உலகத்தில் நிறைய இடங்கள் இருந்தாலும் அவனுக்கான இடங்கள் மிகக் குறைவாகப் போய்விடுகிறது. இந்தச் சூழலுக்கு வந்ததற்குப் பின்னர்தான் நாவலில் பல விஷயங்கள் வருகின்றன. தொடர்ந்து நாவலுக்குள் பிரயாணம் பண்ணிக்கொண்டு போகும் சமயத்தில் முதலில் நீங்கள் நினைத்தது போன்ற ஆள் அல்ல அவன். அவனுக்கென்று சில ஒழுங்குகள் இருக்கின்றன. சில கட்டுப்பாடுகள். அவன் பல விஷயங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறான். எனக்குப் படிக்கும் சமயத்தில் பல விஷயங்களில் என்னைவிடச் சிறந்த மனிதன் அவன் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டுவிடுகிறது. நான் என்னென்ன விஷயத்தில் சிறந்த மனிதன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேனோ, இல்லை கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறேனோ அதைவிடச் சிறந்த மனிதனாக இருக்கிறான் எனும் விஷயம் எனக்குத் தெரிந்தது.

அப்படிப்பட்ட விஷயம் உருவாகும் சமயத்தில் யாரெல்லாம் ஒதுக்கப்பட்டிருக்கிறார்களோ, புறக்கணிப்புக்கு ஆளானார்களோ, அவமானத்துக்கு ஆளானார்களோ, யாரெல்லாம் ஒடுக்குமுறைக்கு ஆளானார்களோ அவர்களையெல்லாம் கொஞ்சங்கொஞ்சமாக நகர்த்தி நாவலின் மையப்பகுதிக்குக் கொண்டு வரும் காரியத்தை நாவலாசிரியர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். அந்தக் காரியத்தை வெற்றிகரமாகச் செய்துகொண்டும் வருகிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இது நாவலுடைய மிகப் பெரிய சமூகத்தளம் என்று நினைக்கிறேன். இந்தச் சமூகத் தளத்தை யதார்த்தத் தளம் தாண்டி உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய காரியம் நடந்ததற்குப் பின்னர் ஒரு நெருக்கடி உண்மையாகவே வரும் என்றால் அதைப் பற்றிக் கவலைப் படத்தானே வேண்டுமென்று நீங்கள் கேட்கலாம். அது நியாயமான கேள்வி. இவ்வளவு காரியங்கள் நடந்திருக்கின்றன. இவ்வளவு ஆற்றல் இருக்கிறது. திடீரென்று நாலைந்து பேராகச் சேர்ந்து அந்தத் தளத்தைப் பிடுங்கி எறிந்துவிடுவோம், புதிய தளத்தைக் கொண்டுவருவோம் என்று சொன்னோம் எனில் அந்தக் காரியங்களுடைய ஆற்றலெல்லாம் வீணாகப் போய்விட்டதே என்னும் கவலை ஏற்படுவது ரொம்ப இயற்கை.

ஆனால் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்துக்குக் கொண்டு வரலாம். யாரெல்லாம் தமிழில் யதார்த்தத் தளம் சார்ந்து செயல்பட்டிருக்கிறார்களோ - 1880இலிருந்து 1999 வரை - அத்தனை பேரும் ஏதோ சந்தர்ப்பத்தில் யதார்த்த தளத்தை மீறியும் செயல்பட்டிருக்கிறார்கள். இத்தாலியிலிருந்தோ, பிரான்சிலிருந்தோ, ரஷ்யாவிலிருந்தோ இறக்குமதி செய்யப்பட்ட புதிய சிந்தனையாளர்களின் சிந்தனையைச் சார்ந்து இது அல்ல. இயற்கையாகவே அவர்கள் படைப்புப் பார்வை சார்ந்தே நூறு நூற்றியிருபது வருடங்களாக எல்லாப் படைப்பாளிகளும் அடிப்படையாக வலிமையான கூறாக யதார்த்தத்தைக்கொண்டிருக்கும் நேரத்திலேயே பல சந்தர்ப்பங்களில் யதார்த்தத்தைத் தாண்டியும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய பேச்சினுடைய மையமான விஷயம்.

பிரதாப முதலியார் சரித்திரத்தை எடுத்துக்கொண்டு பார்த்தோம் எனில் அதில் நம்பமுடியாத சில புராணக் கூறுகள் இருக்கின்றன. பாரதி ஆறில் ஒரு பங்கு என்னும் முழுமைப்படுத்தாத நாவல் எழுதியிருக்கிறார். வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் மொத்த ஜனத் தொகையில் ஆறில் ஒரு பங்கு ஒடுக்கப்பட்ட மக்கள். அந்த மக்களைப் பற்றி நாம் கவலையேபடவில்லை என்னும் எண்ணம் பாரதிக்கு இருந்திருக்கிறது. சிந்தனை, கலாச்சாரம், படைப்பு எல்லாத்திலேயும் இருந்து ஒதுக்கிவைத்திருக்கிறார்கள் என்று பாரதி அவர்களை மையப்படுத்தி ஆறில் ஒரு பங்கு நாவல் எழுதியிருக்கிறார். இப்போது தலித் நாவல் என்று புதிதாகக் கண்டுபிடித்ததுதான் என நம்புகிறோமே அதன் ஆரம்ப வடிவந்தான் ‘ஆறில் ஒரு பங்கு’. இந்தளவுக்குச் சமூகத்தில் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுத வேண்டுமெனில் எந்தளவுக்கு யதார்த்தத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தால் எல்லாராலேயும் ஒதுக்கப்பட்ட இந்த மக்களைப் பற்றிச் சொல்லக்கூடிய முடிவை எடுக்க முடியும். அந்தளவுக்கு யதார்த்தத்துடைய அடிமட்டத்துக்குப் போய் ஆழமான பார்வையைச் செலுத்தி எழுதப்பட்ட படைப்பு ‘ஆறில் ஒரு பங்கு’.
அதை எழுதிய பாரதி ஏன் ‘ஞானரதம்’ எழுதினான்? அது முற்றிலும் கற்பனை. யதார்த்த தளத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பாரதிக்கு ஏதோ காரணத்தால் யதார்த்தத் தளத்தை மீறி அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் - ஒரு மனோபாவம் - இருந்திருக்கிறது. அதேபோல் புதுமைப்பித்தன். அவரும் யதார்த்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட படைப்பாளி. அவருடைய பத்துக்கு ஒன்பது கதைகளும் யதார்த்தத் தளத்தைச் சேர்ந்தவைதான். துன்பக் கேணி நீங்கள் படித்திருக்கலாம். ரொம்ப அளவுக்குத் துயரத்தைச் சொல்லக்கூடிய, மனசைப் பிழியக்கூடிய, மிகவும் சோகமான கதை. அந்தக் கதை எழுதிய புதுமைப்பித்தன் இரண்டு மூன்று வருடங்களில் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளை’யும் கதையை எழுதுகிறார். கடவுள் பூமிக்கு வருவாரா? கடவுள் பத்திரிகை படிப்பாரா? சந்தா கட்டியிருக்காரா? குழந்தைகூட விளையாடுவாரா? இந்த மாதிரியெல்லாம் கதை எழுதியிருக்கிறார்.

பிச்சமூர்த்தியைப் பாருங்கள். அவர் ரொம்ப யதார்த்தமான கதை எழுதுவார். ‘பெரியநாயகி உலா’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். கோவிலுக்குள்ளேயிருந்து தெய்வம் வீதிக்கு வந்துவிடுகிறது. தமிழில் யதார்த்த தளம் சார்ந்து எழுதிய எல்லாப் படைப்பாளிகளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யதாத்தத்தை மீறியும் செயல்பட்டிருக்கிறார்கள். புதுமைப்பித்தன் ‘காஞ்சனை’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் ஒரு அம்மா வருகிறார். அந்தரத்தில் நடந்துபோகிறார். அது அவருடைய முக்கியமான கதை. இதெல்லாம் எதுக்கு எழுதியிருக்கிறார் என்றால், இது ஒரு புதிய விஷயமில்லை. யதார்த்தத் தளத்தையும் மீறிச் செயல்படுவது என்பது நம்முடைய மரபில் நூறு வருடங்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கக்கூடிய காரியம்.

யதார்த்தம் வாழ்க்கை சார்ந்து அதிகமான உண்மையைச் சொல்கிறதே தவிர வாழ்க்கையின் முழு உண்மையைச் சொல்லிவிடுவதில்லை. இன்னும் மனிதன் மனசுக்குள்ளே யதார்த்தத் தளத்தைத் தாண்டிய சிந்தனையிருக்கிறது. கடவுள் இருக்கிறாரா, பேய் இருக்கிறதோ பிசாசு இருக்கிறதோ . . . இந்த மாதிரி சிந்தனை எல்லாம் மனிதனுடைய மூளைக்குள்ளே இருக்கிறது. மனிதனுடைய மனசுக்குள்ளே எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்றன. கண்டதுதான் கோலம் என்று அவன் நினைக்கவில்லை. காணாத விஷயங்களும் இருக்க முடியுமென அவன் உள்ளுக்குள் பயந்திருக்கிறான். இந்தப் பயங்களெல்லாம் இருக்கக்கூடிய காலம் வரைக்கும், மனிதனுக்கு இந்த மாதிரி எண்ணங்கள் இருக்கிறவரைக்கும் படைப்பாளிக்கு இந்த விஷயம் சார்ந்து பொறுப்பும் கவலையும் இருக்கும். இன்று எழுதும் எழுத்தாளர்கள் வரைக்கும் அவர்கள் யதார்த்த தளத்தைச் சார்ந்து எழுதியிருக்கிறார்கள். எதோ ஒரு காரணத்தால் யதார்த்த தளம் என்பது அடிபட்டுப் போய்விட்டது.

யார் தத்துவத்தைக் கெட்டியாக வளர்க்கிறார்களோ அவர்கள் கையில் அதிகாரம் குவிகிறது. உலகம் முழுக்கத் தத்துவத்தைப் பரப்பும் சமயத்தில் ஒருத்தன் அதிகாரத்தைக் குவித்துக்கொள்கிறான். யதார்த்தப் பார்வையை அடிப்படையாகக்கொண்டு அதைச் சார்ந்து எழுதும் படைப்புக்குள்ளேயும் அந்த அதிகாரம் இருக்கிறதென ஜனங்கள் நம்பத் தொடங்கிவிட்டார்களெனில் அவர்களுக்கும் எதார்த்தத்துக்குமான உறவில் சிக்கல் வந்துவிடும். அவர்கள் என்ன மனோபாவத்தில் இருக்கிறார்களோ அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசத் தொடங்கினால் தான் அவனைப் போய் நாம் சென்றடைய முடியும். அப்படிச் சென்றடைவதற்காகப் படைப்பாளி தன் மொழியை மாற்றிக்கொள்ளலாம். தன்னுடைய, தளத்தை, உத்தியை மாற்றிக்கொள்ளலாம். படைப்பிலிருக்கக்கூடிய எத்தனையோ முகங்களை மாற்றிக்கொண்டு அவன் தொடந்து பேச முடியும். அது ஒரு பிரச்சினையல்ல.

படைப்பாளிக்கு இன்ன காரியந்தான் செய்ய முடியும், செய்ய வேண்டும் எனும் பிடிவாதமே கிடையாது. நான் இந்தச் சமயத்தில் இன்ன காரியம் செய்தால் என்னுடைய வாசகர்களுக்குப் பயன்படும். வாசகர்கள் மூலந்தான் நான் சமூகத்துக்குள்ளே போகமுடியும். அப்படிப்போவதற்கு என்ன சோதனை இருந்தாலும் அவர்களுடைய மனோபாவங்கள், அபிப்பிராயங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு எனக்கொரு படைப்பை உருவாக்க முடியும். மாறி வரும் காலத்திற்கேற்ப படைப்பை உருவாக்க முடியும் என்றெல்லாம் நம்பக் கூடியவன்தான் படைப்பாளி. இதுதான் என்னுடைய பேச்சின் முக்கியமான விஷயம்.

திருவண்ணாமலை முற்றம் சந்திப்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம் இது. இதன் ஒலி வடிவத்தைக் கேட்க இங்கே சுட்டவும்: http://koodu.thamizhstudio.com/mutram_1.php
2012 அக்டோபர் 15 சுந்தர ராமசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

Camera

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை

நாகர்கோவில் தெ. தி. இந்துக் கல்லூரி முதுகலை வணிக இயல் துறை பேரவைத் தொடக்க விழாவில் பேசியது - 28.10.1988

'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ' என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு படைப்பாளி என்று கூறுகிற போது என்னை நான் சிறிது வரையறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நான் மொழி சார்ந்த ஒரு படைப்பாளி என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஓவியம் சார்ந்தோ, சிற்பம் சார்ந்தோ, இசை சார்ந்தோ படைப்புத் தொழிலில் ஈடுபட்டவனல்லன் நான்.
படைப்பாளி என்ற வார்த்தையை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். இலக்கியமே வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறது. வாழ்க்கையைப் படைப்பு முறையி ல் அணுக விரும்புகிற ஒரு படைப்பாளி என்று நான் என்னைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

பெரும்பாலும் இலக்கியப் படைப்பாளிகள் எல்லோருமே அவர்கள் தீவிரமான படைப்பாளிகள் என்றால், படைப்பாளி என்ற சொல்லுக்கு அருகதை உள்ளவர்கள் என்றால், அவர்கள் தீவிரமான வாசகர்களாகவும் தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். இளவயதில் ஒருவனுக்கு இந்த வாசிப்பு ஏற்பட்டு மிகச் சிறந்த படைப்புக்களோடு மோதல்கள் நிகழ்ந்து, படைப்பின் ஊற்றுக்கண் திறந்து அவனும் ஒரு படைப்பாளியாக மாறிக் கொள்கிறான் என்று நினைக்கிறேன். படைப்புக்கு முன்னும், படைக்கும் காலங்களிலும், படைக்க முடியாத காலங்களிலும் அனுபவ வறட்சியாலோ அல்லது வயோதிகத்தாலோ அல்லது பொறிகள் சுருங்கிப் போவதாலோ படைக்க முடியாத காலங்களில் கூட படைப்பாளிகள் வாசகர்களாக இருக்கிறார்கள். இப்போது முன்புபோல் எழுத முடியவில்லை; படிக்கத்தான் முடிகிறது என்று சொல்கிறார்கள். ஆக எந்த நிலையிலும் தொடரக்கூடிய ஓர் நிகழ்வாக இந்த வாசிப்பு இருந்துகொண்டிருக்கிறது.

வாசிப்பு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையின் உண்மையான பொருள் என்ன ? வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் இந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறபோது இது மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக எனக்குப்படுகிறது.

மாணவர்களாகிய நீங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள். நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை - மிக மேலான பகுதியை - அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள். அந்த அர்த்தத்தில் இன்று நாம் வள்ளுவனுடன் பேச முடியும்; கம்பனுடன் உறவாட முடியும்; ஷேக்ஸ்பியரின் மிகச் சாராம்சமான பகுதிகள் என்ன என்பதைத் தெளிளத் தெளிவாக, துல்லியமாக நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்தக் காலத்தில் வாழ்கின்ற எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

ஆக, மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் மிகுந்த பரவசத்தோடு பெற்றிருக்கும் இந்த வாய்ப்பை, சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் விசேஷமான வசதியுடன் வாழ்ந்திருந்தாலும் கூட, இந்த அளவிற்கு விரிவாகப் பெற்றிருக்க முடியாது. புத்தகங்கள் அச்சேறத் தொடங்கிய பின் ஒரு மிகப் பெரிய அறிவுப் புரட்சி, கலைப்புரட்சி, கலாச்சாரப் புரட்சி நிகழ்ந்து வருகிறது. இதைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்து கொள்கிற வாய்ப்பை இந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பெற்றிருக்கிறோம். இப்படி யோசிக்கும்பொழுது இன்று வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய ஒருவன் ஏதோ ஒரு துறையைச் சார்ந்து பணியாற்றக் கூடியவன், குடும்பம் சார்ந்து இயங்கக் கூடியவன், உறவினர்களிடம் நட்புப் பாராட்டக் கூடியவன் அதாவது பிரத்யட்சமான வாழ்க்கையை, எதார்த்தமான வாழ்க்கையை எதிர்கொள்ளக் கூடியவன் எதற்காகப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற கேள்வியையும் நாம் எழுப்பிக் கொள்ளலாம்.

இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுதான் கூர்மையான பொறிகளை நாம் பெற்றிருந்தாலும் கூட, நம்முடைய கவன வட்டங்கள், நம்முடைய அறிவு வட்டங்கள், நம்முடைய அனுபவ வட்டங்கள் மிகக் குறுகிய எல்லைகளிலேயே இயங்குகின்றன. தொலைதூரம் என்னால் பார்க்க முடியாது. தொலை தூரத்தில் இருக்கக்கூடிய வாசனையை என்னால் நுகர முடியாது. என்னுடைய அனுபவங்கள் எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவு அவை என்னிடம் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்குக் கூட எனக்குப் பிறருடைய அனுபவங்கள் தெரியாது. ஆகவே இந்த வாழ்க்கையின் அகண்டகாரமான தன்மையையும், இந்த வாழ்க்கையில் பூமிப் பந்தில் ஒரு எறும்பு ஒட்டிக் கொண்டு இருப்பது போல் இருக்கக்கூடிய என்னுடைய நிலையையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பிறருடைய வாழ்க்கை சார்ந்த உண்மைகளையும் பிறருடைய வாழ்க்கை சார்ந்த சாராம்சங்களையும் சத்தான பகுதிகளையும் தெரிந்துகொண்டு அதன் மூலம் இந்த முழு வாழ்க்கையைப் பற்றி, இந்த வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுதான் வாசிப்பின் தேவையை வற்புறுத்தக் கூடிய காரணமாக அமைகிறது.

இந்தக் காலத்தை எதிர்கொள்ளக்கூடிய மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ ஒரு விதத்தில் முழு வாழ்க்கையின் கோலங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இவர்கள் காலத்தால் பின்தங்கிப் போய்விடாமல் உருவாகி வரும் மிக மோசமான காலத்தை - மிக மோசமான காலம் ஒன்று உருவாகி வருகிறது; நாம் அதைப்பற்றி அறிந்திருக்கலாம்; அறியாமல் இருக்கலாம். ஆனால் காலத்தினுடைய மோசமான விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் - எதிர்கொள்வதற்கு வாழ்க்கையின் முழுக் கோலங்களைப் பற்றிய உணர்வுகளை, அனுபவங்களை, அறிவுகளை மாணவர்கள் முடிந்த மட்டும் தேடிக் கொள்வது நல்லது என்று படுகிறது.

மாணவர்கள் இயன்ற வரையிலும் தீவிரமான வாசகர்களாக இருக்கக்கூடிய பெரும் வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நாம் வற்புறுத்திக் கூற விரும்பும் கருத்து. இது மிகவும் முக்கியமானது. மற்றொன்று உங்கள் துறை சார்ந்த விஷயங்கள். மாணவர்கள் கல்லூரிகளில் பல்வேறுபட்ட துறைகளைக் கற்றிருக்கலாம். அந்தத் தேர்வுகள் சுத்தமாக நிகழ்கின்றனவா என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. அநேக சந்தர்ப்பங்களில் முதிர்ச்சி அடையாத மனநிலையில், அல்லது ஒரு பதட்டத்தில், அவசரத்தில் தனக்கு வழிகாட்ட போதிய விவேகம் கொண்ட தந்தையோ, தாயோ அல்லது குடும்ப உறவினர்களோ இல்லாத நிலையில், மாணவர்கள் பல்வேறுபட்ட துறைகளை எடுத்துப் படிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆக தங்களுடைய கண்ணோட்டத்தைச் சேர்ந்த, தங்களுடைய ஆளுமையைச் சேர்ந்த, தங்களுடைய ருசிகளுக்கு ஏற்ற துறையைத்தான் எப்போதும் அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இளமைக் காலத்தில் 18 - 20 வயது வரும்போது தமக்கு அதிக வயதாகிவிட்டது; நாம் விரைவில் கல்வியை முடித்துக் கொண்டு ஏதாவது ஒரு தொழிலுக்கு அல்லது ஒரு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற அவசர உணர்வும் இளைஞர்களுக்கு ஏற்படுவது இயற்கை என்று எனக்குத் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்த வரையில் ஒருசில இழப்புகளுக்கு நீங்கள் உங்களை ஆளாக்கிக் கொண்டாலும் கூட, ஒரு சில சிரமங்களுக்கு உங்களை நீங்கள் ஆளாக்கிக் கொண்டாலும்கூட அல்லது உங்களுடைய ஆசைகளிலிருந்தோ அல்லது உங்களுடைய குடும்பத்திலிருந்தோ சில விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டார்கள் என்றாலுங்கூட, சரியான துறையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லுவேன். இந்தத் துறைகளை மாற்றிக் கொள்ளக்கூடிய விஷயம் இங்கு முக்கியமாக இந்தியாவில் அல்லது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையை தரக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால், மேல்நாட்டில் பலரும் தவறான துறையை விட்டு சரியான துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். 50, 55 வயதிலும் கூட ஒருவர் இப்போதுதான் என்னுடைய துறை, என்னுடைய ருசி, என்னுடைய அணுகுமுறை அல்லது என்னுடைய ஆளுமை எனக்குத் தெரிந்தது; ஆகவே, நான் என்னுடைய துறையை மாற்றிக் கொண்டு விட்டேன் என்று சொல்லக்கூடிய சோதனைகள், இந்த சோதனையில் அடையக்கூடிய வெற்றிகள், இவை நிரந்தரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்குப் பல்வேறு உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

ஆக, மாணவர்கள் அல்லது மாணவிகள் கல்லூரியில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயமல்ல. ஒருசமயம் அவர்கள் சரியான துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒருக்கால் அவ்வாறு தேர்ந்தெடுக்கவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு இருக்குமேயானால் அவர்கள் விரும்பக்கூடிய துறையைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்றைய உலகில் அதிக அளவு உள்ளன. அந்தத் துறையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் அதைச் சார்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் போது - இந்தியாவிலும் சரி, குறிப்பாகத் தமிழகத்திலும் சரி - நான் சந்திக்கக்கூடிய பலரும் அந்த துறையைச் சார்ந்த ஒரு வல்லமையைத் தேடிக் கொண்டவர்களை விட, அதிகமாக அந்தத் துறையைச் சார்ந்து நின்று தங்கள் வாழ்க்கைக் கோலத்திற்கு ஏற்றவாறு அதைச் சமாளிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் - அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.

இளைஞர்களாகிய நீங்கள் இந்தச் சுலபமான வழியில் விழுந்துவிடக் கூடாது என்று ஆத்மார்த்தமாக விரும்புகிறேன். ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்வது என்பது அவ்வளவு கடினமான விஷயமல்ல. அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து நாம் அதில் தேர்ச்சி பெறும் போது மிகுந்த தன்னம்பிக்கை பெறுகிறோம். அந்தத் துறையைச் சார்ந்த மரபுரீதியான விஷயங்கள் மட்டுமல்ல, பாடபுத்தகங்களைச் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல, இன்று அந்தத் துறை அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பற்றியும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அதையும் கற்றுத் தேர்ந்தால்தான் இன்றைய காலத்தை எதிர்கொள்ள முடியும். ஆக, துறையை நன்றாகக் கற்றுக் கொள்ளும் போது வாழ்க்கையில் அணுகு முறையிலேயே ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. நீங்கள் உள்ளூர மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறீர்கள். உங்களைப் பற்றியே உங்களுக்கு உயர்வான எண்ணம் ஒன்று ஏற்படுவதற்கு இது அடிப்படையான காரணமாக அமைகிறது. இதற்கு மாறாக துறை சார்ந்து சமாளித்துக் கொண்டிருப்பவர்கள் அந்தச் சமாளிப்பினால் பிற்காலத்தில் அந்தத் துறையைக் கற்றுக் கொள்வதற்கான ஆற்றலையே இழந்து விடுகிறார்கள். இவ்வளவு நாட்கள் இந்தத் துறையைச் சமாளித்துக் கொண்டிருந்துவிட்டோம், குறை நாட்களையும் சமாளித்துத் தீர்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இவர்கள் கடைசி வரையிலும் தன்பலம் என்பதை உணராமல் - ஆத்ம வீரியத்தை உணராமல் - உள்ளூர பலகீனமான சமூகத்தை எதிர்கொள்கிற கோலத்தை நாம் பார்க்கிறோம். இதை ஒரு எச்சரிக்கையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மாணவ மாணவிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றொரு விஷயம் தாழ்வு மனப்பான்மை சம்பந்தப்பட்டது. பொதுவாகத் தமிழ் மக்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம். நான் அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததன் மூலம் அறிந்து கொண்ட சில விஷயங்கள், சமூக வாழ்க்கையில் நான் அவர்களுடன் பழகும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய செய்திகள் ஆகியன பெரும்பாலும் தமிழ் மக்கள் தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இது மிகக் கொடுமையான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் நான் இதை எடுத்துக் கூறும்போது தங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை எதுவும் இல்லை என்ற தோரணையில் அவர்கள் பல வாதங்களை முன் வைப்பதை நான் கண்டிருக்கிறேன். அந்த வாதங்களின் சாராசம்களை நான் ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தாழ்வு மனப்பான்மை நோய் கொண்டவர்கள் மட்டுமல்ல, தாழ்வுமனப்பான்மையை மறுக்கக்கூடிய நோயும் கொண்டவர்கள்; ஆக இரண்டு நோய்கள் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு நான் வர முடிந்தது.

ஒரு இனம் ஏதோ ஒரு காலகட்டத்தில் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறது என்பது மிக மோசமான, அருவருக்கத் தகுந்த, அல்லது வெட்கப்பட தகுந்த ஒரு விஷயமல்ல. ஆனால் ஸ்தியைப் பற்றி - நாம் இருக்கும் நிலையைப்பற்றி - உணராமல் இருப்பது, தன்போதம் இல்லாமல் இருப்பது, சுயபோதம், சுய அறிவு இல்லாமல் இருப்பது, சுய கணிப்பு இல்லாமல் இருப்பது என்பது மிக மோசமான விஷயம். இதற்கான காரணங்கள் இந்த இனத்திற்கு - மிக செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்த இனத்திற்கு, தொல்காப்பியத்தைத் தோற்றுவித்த இந்த இனத்திற்கு அல்லது வள்ளுவர், கம்பன், பாரதி போன்ற மிகப் பெரிய கவிஞர்கள் வாழ்ந்த இந்த இனத்திற்கு, சிற்பக் கலையில் மிகுந்த வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு, கட்டிடக் கலையில் மிக வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு ஒரு காலத்தில் கடல்மீது மிகுந்த ஆட்சி கொண்ட இந்த இனத்திற்கு - ஒரு மொழியை இரண்டாயிரம் வருடங்களாக செம்மையாகத் தக்க வைத்துக் கொண்டு, இன்று தோன்றும் கருத்துக்களைக்கூடத் தெளிளத் தெளிவாக சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு மொழியைக் காப்பாற்றி வரும் ஒரு இனத்திற்கு - ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் 200 வருடங்களாக ஏற்பட்டது என்பதை எனக்குச் சொல்ல தெரியவில்லை. அதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுகள் எவை என நாம் எடுத்துக் கொண்டோமென்றால் பல்வேறுபட்ட குணங்கள் மூலம் அந்த நோயின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவான ஒரு நோய்க்கூறு - எல்லோருக்கும் புரியக்கூடிய நோய்க்கூறு - என்னவென்றால் தமிழனுக்கும் ஆங்கிலத்துக்கும் இருக்கக்கூடிய உறவு. அந்த உறவில் தமிழனிடம் இருக்கக்கூடிய மயக்கம் - உறவல்ல, அதில் இருக்கக்கூடிய மயக்கம் - ஆங்கிலத்தின்பால் அவன் கொண்டிருக்கக்கூடிய மயக்கம் மிகச் சிறந்த ஒரு மொழியைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட - மிகப் பெரிய பாரம்பரியத்தைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட - ஆங்கில மொழியின் மீது தமிழன் கொண்டுள்ள மயக்கம், அதனுடைய கோலங்கள் மிக விரசமானவை. அதை நாம் பரஸ்பரம் பேசிக்கொள்வதைவிட அதை நினைத்துப் பார்ப்பதே நாகரிகமான காரியமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழனுடைய தாழ்வு மனப்பான்மை எப்போதும் தெளிளத் தெளிவாகக் காட்டக்கூடிய அறிகுறிகளில் ஒன்று, மற்றொரு வகையில் சிந்தித்தால், கடந்தகாலத்தில் நமக்கு இருந்த அளவுக்குச் சாதனைகள் இன்று இல்லாமல் போனது. முக்கியமாக ஒரு 50 ஆண்டுகள் நமக்குச் சாதனைகள் இல்லாமல் போனது. இவை நம்முடைய தாழ்வு மனப்பான்மை வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ என்று நான் சந்தேகப்படுகிறேன். தமிழினம் மிகப் பெரிய ஒரு நிகழ்வை நினைத்துப் பரவசம் கொள்ளக்கூடிய எந்த சந்தர்ப்பத்தையும் கடந்த 50 வருடங்களில் உருவாக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

பிளாரன்ஸ் என்ற ஒரு கறுப்பு நிறப் பெண் ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயத்தில் முன்னே வந்து மற்ற இனத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி - மற்ற தேசத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி - முன்னால் வந்து நிற்பது என்பது ஓட்டப்பந்தயம் சம்பந்தமான விஷயம் மட்டுமல்ல; ஒரு இனம் தன்னுடைய பெருமையை வற்புறுத்தக்கூடிய காரியமும் கூட என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வைப் பார்க்கக்கூடிய கோடிக்கணக்கான கறுப்பர் இனம் ?காலங்காலமாக தங்களை வெளிளை இனம் தாழ்த்திக் கொண்டு வந்திருக்கிறது; அவர்களுக்கு இருக்கக்கூடிய குணாதிசயங்கள் நமக்கில்லை; அந்தச் குணாதிசயங்களை நம்மால் பெற முடியாது என்று நம்மை மட்டம் தட்டி வைத்திருப்பது உண்மை அல்ல ? என்று அந்நேரம் உணர்ந்து பரவசம் கொள்கிறது.

கடந்த 50 வருடங்களில் தமிழனும் இது போன்ற ஒரு பரவசத்தை - கூட்டுப் பரவசத்தை - அடையவில்லை. தனிப்பட்ட முறையில் சில பரவசங்களை அடைந்திருக்கலாம். தனிப்பட்ட முறையில் நம்பிக்கை பெற்றிருக்கலாம். ஆனால் இந்த இனம் மொத்தமாக நம்பிக்கை பெறுவதற்கான காரணம் கடந்த 50 வருடங்களில் உருவாகவில்லை என்று படுகிறது.

கடந்த காலங்களில் நம்முடைய கலாச்சாரத் தலைமை - நம்முடைய அரசியல் தலைமை - நம்முடைய கலைத் தலைமைகள் ஆகியவற்றால் நமக்குப் பெருமை வரவில்லை. மட்டுமல்ல நாம் வெட்கி அவமானப் படக்கூடிய அளவுக்குப் பல சிறுமைகளுக்கும் நாம் ஆளாகியிருக்கிறோம் என்பதையும் கூற வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் நாம் உண்மையாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நம்முடைய அரசியல் தலைவர்களின் தரத்தைப் பற்றி நீங்கள் ஆத்மார்த்தமாக யோசித்துப் பார்ப்பீர்களேயானால் அவர்களுடைய தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய திறமைகள், அவர்களுடைய சவடால்கள் அல்லது சாமர்த்தியங்கள் உள்ளூர் சந்தையில் விலை போகலாம். ஆனால் உலகம் அவர்களை மதிக்காது என்று உள்ளூர நமக்குத் தெரியும்.

நம்முடைய மிகச் சிறந்த எழுத்தாளர்களைத்தான் கலாச்சார தலைவர்கள் என்று நாம் சொல்ல வேண்டும். லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நம்முடைய எழுத்தாளர்களின் தரத்தை நீங்கள் ஆராய்ந்தால் அவர்களில் பெரும்பான்மையரின் தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நுட்பமான வாசனை கொண்ட வாசகர்களுக்கு இது நன்றாகவே தெரியும். நம்முடைய திரைப்பட இயக்குநர்கள் எவரையும் உலகத் திரைப்படம் ஏற்றுக் கொள்ளாது என்பது நமக்குத் தெரியும். வங்காளத்தில் ரவீந்தரநாத தாகூர் தோன்றினார். அவர் மறைவுக்கு சில வருடங்களுக்கு உள்ளாகவே சத்யஜித் ரே என்ற திரைப்பட இயக்குநர் தோன்றி உலகப் படங்களுக்கு நிகரான திரைப்படங்களை எடுத்து வங்காள இனம் தன்னுடைய வல்லமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு நிகழ்வு இன்று வரையிலும் இந்த நூற்றாண்டில் நம்மிடம் நிகழவில்லை. பக்கத்தில் இருக்கக்கூடிய கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள் அரசியல் சார்ந்து ஈ. எம். எஸ். நம்பூதிரிபாடு - இலக்கியம் சார்ந்து சிலர்.

மேற்கத்திய நாகரிகம் என்று சொல்லும் போது ஆடை, அணிகலன்கள் சம்பந்தமான விஷயங்களை நான் சொல்லவில்லை. அவை மேம்போக்கான விஷயங்கள். அடிப்படையாக வாழ்வோடு கொள்ளவேண்டிய உறவுமுறை சம்பந்தமான விஷயங்களில் மேற்கத்திய நாகரிகம் செலுத்தக்கூடிய பாதிப்புகள் நம்மிடம் மிக விரைவாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குறுக்கீடு நம்மைக் கண்டு கொள்வதற்கு - நம்மை நாமே கண்டு கொள்வதற்கு - பெரும் தடையாக இருக்கிறது. நம்மைச் சார்ந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் நமக்கு ஒரு அலட்சியமும், மேல் நாட்டிலிருந்து வரக்கூடிய எல்லா விஷயங்களைப் பற்றி மிகுந்த மோகமும் கொண்டவர்களாக நாம் பொதுவாக இருந்து வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல முடியும். இப்போது உலகெங்கும் அலோபதி வைத்தியத்திற்கு எதிரான ஒரு மனோபாவம் உருவாகி வருகிறது. இந்த வைத்தியத்தை உருவாக்கியவர்கள் உண்மையில் வைத்தியத்தை முதன்மைப்படுத்தியவர்கள் அல்லர் என்றும், அவர்கள் மருந்து வியாபாரிகள் என்றும், மருந்து வியாபாரிகளுடைய சுயநலங்களுக்கு ஆட்பட்ட மருத்துவர்கள் என்றும் சொல்லலாம் என்கிறார்கள். நோயிலிருந்து நிவாரணம் தரக்கூடிய மார்க்கங்களையே இந்தத் துறை சிந்தித்திருக்கிறது. ஆனால் வைத்தியத் துறையின் அடிப்படையான நோக்கம் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பது. அந்த அடிப்படை இந்தத் துறைக்கு இல்லை என்பதை எண்ணற்ற மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் இப்போது பரப்பி வருகிறார்கள். ஆக உலகத்திற்குப் பொதுவான வைத்தியம் ஒன்று இருக்க முடியாது என்றும், ஒவ்வொரு நாட்டிலும் தொன்றுதொட்டு எந்த வைத்தியமுறைகள் உருவாகி வந்திருக்கிறதோ அந்த வைத்தியமுறைகள் தான் அந்த மக்களுக்கு உகந்ததாக இருக்கமுடியும் என்றும், அந்த வைத்தியத் துறைகளை வளர்த்து எடுப்பது தான் அந்த மக்களுடைய இலட்சியமாக இருக்கவேண்டுமே ஒழிய பிற நாட்டிலிருந்து வைத்தியத்தை இறக்குமதி செய்வது அவர்கள் நோக்கமாக இருக்க கூடாது என்றும் சிறந்த வைத்தியர்கள் கூறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் இவான் இலியா எலிவிச் என்கிற ரஷ்ய மருத்துவர். அவர் தன்னுடைய ஒரு புத்தகத்தில் தான் ஆரம்ப நாட்களில் காந்தியினுடைய சிந்தனைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றார். இந்தச் சிந்தனையைக் காந்தி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னாலேயே ?ஹிந்து சுயராஜ் ? என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

நாம் மேல் நாட்டு சிகிச்சைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நமக்கு உகந்த சிகிச்சை முறைகள் நம்முடைய முன்னோர்கள் நமக்கு உருவாக்கி வைத்திருக்கிறார்கள், அதை நாம் வளர்த்துக் கொண்டு போக வேண்டும் என்ற கருத்தை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே காந்தி கூறியிருக்கிறார். ஆனால் அந்தக் கருத்துக்களை இங்கிருக்கும் அறிவாளி வர்க்கம் போதிய அளவுக்கு முக்கியம் தந்து எடுத்துக் கொள்ளவில்லை. இதே கருத்துக்கள் மேல் நாட்டிற்குச் சென்று, அந்தக் கருத்துக்கள் அவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப சிறிது மாற்றப்பட்டு புத்தகங்கள் மூலம் சொல்லப்படும் பொழுது, அவை மிகப்பெரிய கருத்துக்களாக நமக்குத் தோன்றி அதைப் பின்பற்றத் தொடங்குகிறோம். இதே மனோபாவத்தில் தான் மோகம் - வாழ்க்கையைப் பற்றிய ஒரு மோகம் - சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.

இனிமேல் தனித்து நின்று நமது சிந்தனையை வளர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியமான விஷயமல்ல. உலகத்தில் தோன்றியுள்ள எல்லா சிந்தனைகளையும் நம்முடைய சிந்தனைகளைச் சார்ந்த தெளிவுகளுக்கு உரமாக எடுத்துக் கொள்ளும் பயிற்சியை நாம் பெறலாம். ஆனால் நம்முடைய சிந்தனைகளை விட்டுவிட்டு - நமக்குச் சுயமான விஷயங்களை நாம் முற்றாக விட்டுவிட்டு - வேறு சூழ்நிலையில் வேறு காரணங்களுக்காக உருவான கருத்துக்களை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையின் நிதானத்தை மிகுந்த அளவுக்குக் குறைத்துக் கொண்டு வருகிறோம் என்று நான் நினைக்கிறேன்.

முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன். *

Camera

என்னைக் கவர்ந்த என் படைப்பு

தில்லி, ஆல் இண்டியா ரேடியோ, அயல் நாட்டு ஒலிபரப்பில் ஒலிபரப்பப்பட்டது. 15.6.95

என்னைக் கவர்ந்த என் படைப்பு என்று நான் எழுதியுள்ளவற்றில் எதைச் சொல்வேன் ? ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என் மற்ற படைப்புக்களுக்கும் எனக்குமான உறவு என்ன ? அவை என்னைக் கவராத படைப்புக்களா ?

நான் நாற்பத்தைந்து வருடங்களாகத் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். கவிதைகளும், சிறுகதைகளும் நாவல்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். கட்டுரைகளில் அதிகமும் இலக்கிய விமர்சனத் துறையைச் சார்ந்தவை. பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பும் சிறிது செய்திருக்கிறேன். நீண்ட கால எழுத்துப் பணி என்று பார்க்கும் போது படைப்பின் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. இரண்டு நாவல்களும் சுமார் ஐம்பது சிறுகதைகளும் ஐம்பது கட்டுரைகளும் நூறு கவிதைகளும் எழுதியிருக்கிறேன். குறைவாக எழுதியிருக்கும் நிலையிலும் எனக்கு மன நிறைவைத் தரும் சில விஷயங்களும் உள்ளன. என் எழுத்தின் உருவம் எதுவாக இருந்தாலும் சரி, எழுதும் காலத்தில் எனக்கிருந்த ஆற்றலையும் அறிவையும் மனத்தையும் முழுமையாகச் செலுத்தியே எழுதியிருக்கிறேன். அத்துடன் ஒவ்வொரு படைப்பையும் செம்மை செய்யவும் செப்பனிடவும் என்னால் இயன்ற அளவு முயன்றிருக்கிறேன். அவசரமாகவோ கவனக்குறைவாகவோ எதையும் எழுதிய நினைவு இல்லை. இந்தப் பின்னணியில் எனக்கும் என் படைப்புக்களுக்குமான உறவு சற்று நெருக்கமானது. இந்த நெருக்கமான உறவு கொண்டுள்ள படைப்புக்களிலிருந்து ஒன்றை மட்டும் குறிப்பிட்டு அது என்னைக் கவர்ந்துள்ளதாகக் கூறுவதற்கு சிறிது மனத்தடை இருக்கிறது.

எனக்கு தரப்பட்டுள்ள தலைப்பை ‘என்னை அதிகம் கவர்ந்த என் படைப்பு எது’ என்ற கேள்வியாக இப்போது மாற்றிக் கொள்கிறேன். ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ என்ற தலைப்புக் கொண்ட என் இரண்டாவது நாவல்தான் என் மனதில் சற்றுச் சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

புதுமை மீது எனக்குத் தீராத கவர்ச்சி உண்டு. புதுமை என்று மொழி சார்ந்து நிற்கும் வடிவத்தை மட்டுமே நான் குறிப்பிடவில்லை. புதுமை என்பது முக்கியமாக எனக்கு விஷயம் சார்ந்த விமர்சனம் ஆகும். அது வாழ்க்கை சார்ந்த புதிய பார்வையும் ஆகும். இன்றைய வாழ்க்கை சார்ந்த தாழ்வுகளை விவாதித்து குறைகளை இனம் கண்டு அவற்றை நீக்கும் வழிவகையாகும். இந்த வேட்கை சார்ந்ததுதான் என்னுடைய புதுமை. புதிய படைப்பு இன்று வரையிலும் படைப்பாளிகள் போயிராத வாழ்க்கையின் புதிய பிராந்தியத்திற்குள் போயிருக்க வேண்டும். புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து வாழ்க்கை சார்ந்த பார்வைகளை விரிவு படுத்தியிருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி நம் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்தியிருக்கவேண்டும். பழைய மொழியை வைத்து இந்த லட்சியங்களை நிறைவேற்ற முடியாது. வாழ்க்கையின் விமர்சனம் தரும் புதிய மொழிதான் புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் படைத்துக் காட்டும். மொழி கூடி வந்த வகையிலும் விமர்சனம் கூர்மை கொண்ட விதத்திலும் வாழ்க்கை சார்ந்த என் கவலைகள் வெளுப்பட்ட முறையிலும் ‘ஜே.ஜே : சில குறிப்புக்கள்’ மீது எனக்குத் தனியான மதிப்பு இருக்கிறது.

உலகச் சிந்தனையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம் நிலை இன்று பல விதங்களிலும் தாழ்ந்து கிடக்கிறது. இந்திய மொழிகளில் கூட நவீன கலைகளும் நவீனச் சிந்தனைகளும் நம்மைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கின்றன. நமக்குப் பண்டை இலக்கியச் செல்வம் நிறைய இருக்கிறது. அதன் இருப்பை உணர்ந்து நாம் பெருமிதம் கொள்வது மிகவும் இயற்கையான காரியம். ஆனால் இன்றைய வாழ்வை எதிர் கொள்ள இன்றைய காலத்திற்கு உரித்தான அறிவியல் பார்வையும் நவீனச் சிந்தனைகளும் நவீனப் படைப்புகளும் நமக்குத் தேவை. சென்ற கால இலக்கியச் சாதனைகளான சங்ககாலக் கவிதைகள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் போன்றவற்றிற்கு நிகரான சிகரச் சாதனைகளை நாம் இன்றும் உருவாக்கினால்தான் இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தினர் நம்மை மதிப்பார்கள். உலகம் நம்மை மதிக்கும். இன்றைய நம் தமிழ் வாழ்வை மறு பரிசீலனை செய்யும் ஆக்கங்கள் நம்மிடம் இல்லையென்றால் நேற்று இருந்தவற்றைப் பற்றி மட்டுமே பேசுவது பழம் பெருமை பேசுவதாகிவிடும்.

இன்றையத் தமிழ் வாழ்வின் நிலை எவ்வாறு உள்ளது ? தமிழன் இன்றைய காலத்திற்குரிய பார்வையைக் கொண்டிருக்கிறானா ? அரசியல் சார்ந்தும் கலைகள் சார்ந்தும் அவனுடைய விழிப்பு நிலை எவ்வாறு இருக்கிறது ? நேற்றைய இலக்கியச் செல்வங்களையும் வரலாற்றையும் இன்றைய வாழ்க்கையைச் செம்மை செய்யும் லட்சியத்தை முன் வைத்து அவனால் மறு பரிசீலனை செய்ய முடிகிறதா ? தமிழனுடைய ஈடுபாடுகள், பழக்க வழக்கங்கள் எந்த நிலையில் இருக்கின்றன ? தமிழன் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களின் தரம் என்ன ? அவன் படிக்கும் பத்திரிகைகளும் வன் பேசும் அரசியலும் நாள் முழுக்க அவன் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் எந்த அழகில் இருந்து கொண்டிருக்கின்றன ? அவன் விரும்பிப் படிக்கும் புத்தகங்களின் உள்ளடக்கம் என்ன ? மக்களுக்குத் தொண்டாற்றும் நிறுவனங்களையும் அமைப்புக்களையும் கல்வித் துறைகளையும் அவன் வாழ்வுக்குகந்த அரசையும் அவனால் உருவாக்க முடிந்திருக்கிறதா ? இன்றையத் தமிழ் சமுதாயத்தில் தத்துவப் பிரச்சனைகள் எவை ? நெருக்கடிகள் எவை ? உலகத் தளத்திலிருந்தும் இந்தியத் தளத்திலிருந்தும் தமிழ்ச் சமுதாயம் தன் வளர்ச்சியை முன் வைத்து எவற்றைப் பெற்றுக் கொண்டிருக்கிறது ? இந்திய கலாச்சாரத்திற்கும் உலகக் கலாச்சாரத்திற்கும் தமிழ்ச் சமுதாயம் எதைக் கொடுத்து பெருமை தேடித் தந்திருக்கிறது ?

நான் எழுத ஆரம்பித்த 1950ஆம் ஆண்டிலிருந்து ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ எழுதி முடித்த 1980 ஆம்ஆண்டு வரையிலும் எனக்கு முக்கியமாக இருந்த கேள்விகள் இவைதாம். இந்தக் கேள்விகளை தமிழ் அறிஞர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் எழுத்தாளர்களும் உரக்கக் கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதாவது இந்தக் கேள்விகள் சார்ந்த விவாதங்கள் தமிழ் சமூகத்தில் நடைபெற வேண்டும் என்று விரும்பினேன். ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ என்ற நாவலின் படைப்பாக்கத்திற்குப் பின்னால் நின்ற குறிக்கோள் இதுதான்.

‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ தொடராக வெளுயிடப்பட்டதல்ல. அது புத்தக உருவத்திலேயே வாசகர்களைச் சந்தித்தது. இப்படிப் பார்க்கும்போது அதைக் கணிசமான வாசகர்கள் படித்தார்கள் என்றே சொல்வேன்.

ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் இன்று தீவிரமான வாசகர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள். அந்தத் தீவிரமான வாசகர்களிலும் எழுத்தாளர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டால் வாசகர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவு. தமிழகத்தில் ஒரு தீவிர எழுத்தாளன் வாசகனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறானா அல்லது சக எழுத்தாளனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறானா என்று கேட்கும் நிலையில்தான் சூழல் இருந்து கொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் உறவு நிலை ஒரு படைப்பைச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பாதித்துவிடுகிறது. படைப்பைச் சார்ந்த வாசக மதிப்பீடு ஒரு பாதிப்புச் சக்தியாக பெரும்பாலும் உருவாகி வருவதில்லை.

தமிழகத்தில் ஒவ்வொரு துறையும் அந்தந்தத் துறைகளில் நுட்பமான தேர்ச்சி பெறாதவர்கள் கைகளிலேயே இருந்து கொண்டிருக்கிறது. துறை சார்ந்த தேர்ச்சிகள் பெற்று அரிய காரியங்களைச் சாதிப்பதைப் பார்க்கிலும் குறுகிய நோக்கங்களை முன் வைத்து மேலோட்டமான காரியங்களைச் செய்து புகழும் பணமும் தேடிக் கொள்வதே ஒரு வாழ்க்கை முறையாக இன்று உருவாகிவிட்டது. தமிழ் வாழ்வின் கலை விமர்சனங்களாக தமிழ்த் திரைப்படங்கள் இல்லை. அவை வெறும் கேளிக்கைகளாகவே இருக்கின்றன. அதிக விற்பனை கொண்ட பத்திரிகைகள் தமிழ் வாசகனுக்கு எதுவும் கற்றுத் தருவதில்லை. நுனிப்புல் மேய்பவர்களாக அவர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. சகல வணிகக் கலைகளின் நோக்கமும் வாசகர்களை அல்லது பார்வையாளர்களின் பாலுணர்ச்சிகளை வெளுப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ சுரண்டுவதாகவே இருக்கிறது. மக்கள் விரும்பிப் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அவர்களுடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் மழுங்கடிக்கக் கூடியதாக இருக்கின்றன. உழைப்பு, சாதனை, தொண்டு, உண்மை, மனித நேயம் போன்ற அரிய சொற்களுக்கு இன்று தமிழ் வாழ்வில் இடமில்லை. சீரழிந்த அரசியலைப் பந்தாடத் தெரிந்தவர்கள் சகல வெற்றிகளையும் இன்று தம் காலடிகளில் போட்டு மிதித்துவிட முடியும்.

தமிழ் வாழ்வில் இன்றைய சீரழிந்த நிலையை ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ ஒரு விவாதப் பொருளாக்குகிறது. விருப்பு வெறுப்பற்ற தீவிரமான வாசகர்கள்தான் ‘ஜே.ஜே : சில குறிப்புக’ளை ஒரு விவாதப் பொருளாக மாற்ற முடியும். சீரழிந்த தமிழ் வாழ்வு பல துறைகளையும் சீரழித்து நிற்பதுபோல் தமிழில் தீவிர வாசகர்களையும் முடிந்த வரையிலும் சீரழித்திருக்கிறது. இந்தச் சூழலில் அப் படைப்பை உருவாக்கிய நோக்கம் போதிய அளவு நிறைவேறவில்லை. காலத்தின் மாற்றத்தில் புதிய வாசகர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களுடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’.