சு.ரா.வைப் பற்றி

Camera

சுந்தர ராமசாமி: தந்தை கூற்றுக் கவிதை

பெருமாள்முருகள் ‘பசுவய்யா’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் சுந்தர ராமசாமி. அவர் எழுதிய முதல் கவிதை ‘உன் கை நகம்’ 1959, மார்ச் மாத ‘எழுத்து’ இதழில் வெளியானது. அதன்பின் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து கவிதைகள் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுதியவற்றின் மொத்த எண்ணிக்கை மிகவும் குறைவு. நடுநிசி நாய்கள் (1975), யாரோ ஒருவனுக்காக (1987) ஆகிய தலைப்புகளில் நூலாக்கம் பெற்றவை பின்னர் ‘107 கவிதைகள்’ (1996) என ஒரே நூலாகவும் வெளியாயின. இவை மூன்றும் ‘பசுவய்யா’ என்னும் புனைபெயரில் வெளிவந்தவை. அவர் இறப்புக்குப் பிறகு தொகுக்கப்பட்ட ‘சுந்தர ராமசாமி கவிதைகள்’ நூலில் உள்ள கவிதைகளின் எண்ணிக்கை 110. குறைவாக எழுதினாலும் நவீன கவிதை வரலாற்றில் பெரிதும் கவனம் பெற்றவையாகவும் பல கவிதைகள் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்பட்டவையாகவும் உள்ளன. ‘மணிக்கொடி’ காலத்தில் கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி முதலியோரால் தொடங்கப்பட்ட நவீன கவிதை அடுத்த கட்டமாக 1950களின் இறுதியில் ‘எழுத்து’ இதழ் மூலம் வலுப் பெற்றது. ‘எழுத்து’ காலக் கவிஞராகப் பசுவய்யா என்னும் சுந்தர ராமசாமி அடையாளம் பெறுகிறார். உன் கை நகம், கதவைத் திற, மேஸ்திரிகள், சவால், ஆந்தைகள், நடுநிசி நாய்கள், எனது தேவைகள், கன்னியாகுமரியில், உன் கவிதையை நீ எழுது உள்ளிட்டவை மிக முக்கியமானவையாக விமர்சகர்களால் கருதப்பட்டன. இவை அனைத்தும் 1990க்கு முன் எழுதப்பட்டவை. 1990க்குப் பிறகு அவர் எழுதியவை முந்தையவற்றைப் போலப் பெரிதாகக் கவனத்திற்கு உள்ளாகவில்லை. 1980களுக்குப் பிறகு நவீன கவிதையில் ஒலிக்கத் தொடங்கிய பல்வேறு குரல்களுக்கு இடையே முன்னோடிகளின் குரல்கள் மங்கிப் போயின என்றே தோன்றுகிறது. சு.ரா.வின் கவிதைகள் பற்றி… சுந்தர ராமசாமியின் கவிதைகள் பற்றி “…ஆழ்ந்த வாழ்க்கைப் பார்வை, செறிவான – கச்சிதமான கவிதையமைப்பு, கேலியும் கிண்டலும் கலந்த அங்கதம், நுட்பமும் நூதனமும் கூடிய கவிதை மொழி, வாழ்க்கையின் அர்த்தம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் இடையறாத தேடல், காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தன்மை என்று தீவிரமான இலக்கியப் பிரக்ஞையுடன் கவிதை எழுதியவர் சுந்தர ராமசாமி” (சுந்தர ராமசாமி கவிதைகள், ப.7) என்று ராஜமார்த்தாண்டன் கூறுகிறார். “வாழ்வனுபவத்தை அறிதல், உணர்தல், விமர்சித்தல் ஆகிய செயல்களையே சுந்தர ராமசாமி கவிதைகள் படைப்பின் குணாம்சங்களாகக் கொண்டிருக்கின்றன. இதன் அடியோட்டமாக ஒரு கருத்து நிலையும் விரிந்து செல்கிறது. சுந்தர ராமசாமியின் எந்தக் கவிதையை எடுத்துக்கொண்டாலும் இந்தக் குணத்தை இனம் காண முடியும். இந்தக் குணங்கள் தனித்தும் ஒன்றோடொன்று கலந்தும் ஒன்றோடொன்று முரண்பட்டும் கவிதைக்கான தளத்தை உருவாக்குகின்றன” (மேற்படி, ப.235) எனச் சுகுமாரன் கருதுகிறார். சுகுமாரன் கூறுவதைச் சற்றே விரித்துக் கண்டால் ‘அனுபவமும் கருத்துநிலையும் இயைந்து நிற்பவை’ எனச் சுந்தர ராமசாமியின் கவிதைகளை மதிப்பிடலாம். ‘எழுத்து’க் காலக் கவிஞர்களிடமிருந்து தனித்துத் தெரியும் சொல்லாட்சி, வடிவச் செறிவு, சொல்முறை ஆகியனவும் அவர் கவிதைகளின் இயல்பு. கை வந்தபடி அல்லாமல், நவீன கவிதைகளில் அடிபிரிப்பைக் கவனத்தோடு செய்தவர் அவர். பத்தி பிரிப்பு, நிறுத்தற் குறிகள் ஆகியவற்றிலும் பெரிதும் கவனம் செலுத்தியவர். இலகுவான வாசிப்பும் பொருள் தெளிவும் கொண்டவையாகக் கவிதை இருக்க வேண்டும் எனவும் கருதியவர். அவர் கவிதைகள் எடுத்துரைப்புக்கு மிகவும் ஏற்றவையாக இருப்பதற்கு மேற்கண்ட இயல்புகள் எல்லாம் காரணம். ஒரு கவிதையை மட்டும் இங்கே காணலாம். மாறுபட்ட கவிதை ‘பூக்கள் குலுங்கும் கனவு’ என்னும் கவிதை ஒரு தந்தை மனநிலையிலிருந்து எழுதப்பட்டுள்ளது. உணர்ச்சிகளுக்குப் பெரிதும் இடம் கொடுக்காதவை சு.ரா.வின் கவிதைகள். அதிலிருந்து மாறுபட்ட கவிதை இது. இதிலும் உணர்ச்சிப் பிரவாகம் ஏதுமில்லை. ஆனால், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாத மனநிலை தானாக வெளிப்பாடு கொள்கிறது. முன்னிலையை நோக்கிப் பேசும் கூற்று முறை தமிழ்க் கவிதை மரபுக்கு மிகவும் ஏற்றது. சங்க இலக்கிய அகப்பாடல்கள் அனைத்தும் கூற்று முறையில் அமைந்தவையே. தலைவி, தோழி, தலைவன், செவிலி, நற்றாய், பாங்கன், கண்டோர் முதலிய பாத்திரங்களின் கூற்றாக அவை அமையும். ஒரே குரல்தான் பேசும். முன்னிலையின் எதிர்வினைகள் என்ன என்பதையும் இந்தப் பாத்திரக் கூற்று மூலமாகவே உய்த்துணர முடியும். சில சமயம் பாடலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள துறைக்குறிப்பு அதற்கு உதவும். இந்தக் கூற்று முறையில் தந்தை இடம்பெறுவதில்லை. காதலை வெளிப்படுத்தும்போது தலைவி – தோழி – செவிலி – நற்றாய் – தந்தை, தனயன் என்னும் வரிசை முறையை அகப்பொருள் இலக்கணம் கூறும். ஆனால், தந்தைக்கும் தனயருக்கும் கூற்று இல்லை. அவர்கள் பேசுவதாகப் பாடல் எதுவும் சங்க இலக்கியத்தில் இல்லை. காதலை அவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் திருமணம் நடைபெறும். இல்லாவிட்டால் உடன்போக்குத்தான். சரி, திருமணத்திற்குப் பிறகும்கூடத் தந்தை, தனயரின் குரலுக்கு ஏன் இடம் தரவில்லை என்பது வியப்பிற்குரியது. மகள் திருமணம் சுந்தர ராமசாமியின் கவிதை அவ்வகையில் மரபில் இல்லாத ‘தந்தை கூற்று’ என்று சொல்லலாம். ‘மணம் முடிந்து சென்ற மகளை (எண்ணி அல்லது) நோக்கித் தந்தை கூறியது’ என்று இக்கவிதைக்குத் துறை வகுக்கலாம். மகளுக்குத் திருமணம் நடந்து முடிகிறது. அதன் பின் சில நாட்கள் அல்லது மாதங்கள் கழிந்த பிறகும் தந்தை மனதில் சில காட்சிகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. மகளிடம் நேராகப் பேச இயலாததைக் கவிதையில் பேசுகிறார் அத்தந்தை. மனதில் மகளை முன்னிறுத்தி அவளை விளித்துத் தம் கூற்றைத் தொடங்குகிறார். ‘அன்று, அதாவது உன் திருமணம் நடந்த அன்று, நீ நின்ற நிலை’ என்கிறார். உடனே தனக்குள் பேசிக்கொள்ளத் தொடங்குகிறார். ‘ஏன் அந்தக் காட்சி என் மனத்தில் இவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கிறது?’ என்று கேட்டுக்கொள்கிறார். அவருக்குக் காரணம் புரியவில்லை. அப்படியென்ன காட்சி? ‘அலங்காரங்களின் வசீகரம்; உன் அருகே அந்த இளம் மீசை.’ அலங்காரம் இல்லாமல் திருமணமா? எல்லோரையும் வசீகரிக்கும் அலங்காரம் அல்லவா அது? அத்தகைய அலங்காரத்தை இன்னொரு முறை யாரும் செய்து கொள்வதில்லை. சரி, அலங்காரங்களின் வசீகரத்தால் தான் அந்தக் காட்சி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறதா? இல்லை, அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. ‘உன் அருகே அந்த இளம் மீசை.’ அதுதான் காரணம். தன்னருகே ஓடி விளையாடிக்கொண்டிருந்த மகள் அருகே இப்போது இளம் மீசை கொண்ட மணமகன். அதை ஏற்றுக்கொள்வதில்தான் தந்தைக்குப் பிரச்சினை என்பது புரிகிறது. மீண்டும் தந்தை தன் மனதோடு பேசத் தொடங்குகிறார். மகளுக்குத் திருமணம் நடக்க வேண்டியது முறைதானே. அதிலென்ன மனக்குழப்பம்? இப்படியெல்லாம் தனக்குக் குழப்பம் ஏற்படும் என்று அவர் ஒருபோதும் நினைத்தவர் அல்ல. அதனால் சட்டென அவர் மனம் காலத்தை நோக்கிப் பேசுகிறது. ‘காலமே’ என்று அழைக்கிறார். ‘எதற்கு என்னை இங்கெல்லாம் அழைத்துச் செல்கிறாய்?’ என்று கேட்கிறார். எங்கெல்லாம் காலம் அழைத்துச் செல்கிறது? திருமணம் முடிந்த மகளை எண்ணித் தவிக்கும் மனநிலையைத்தான் அப்படிச் சொல்கிறார். மேலும் சொல்கிறார், ‘என் உணர்வுகளில் நான் குழம்பிச் சரிகிறேனே.’ பிறந்தது முதல் தன்னருகில் இருந்த பெண்ணை இப்போது அனுப்பி வைப்பதென்றால் உணர்வுகள் குழம்பாதா? மனம் சரியாதா? நேரடியாக விஷயத்திற்கு வருகிறார். “என்னருகே வெகுநாள் சின்னஞ்சிறு பெண்ணாக இருந்த நீ எவ்வாறு இவ்வளவு பெரிய கனவாய்ப் பந்தலில் விரிந்தாய்?” என்று கேட்கிறார். திருமணப் பந்தலில் உரிய அலங்காரங்களுடன் காணும் போதுதான் தன் மகளின் வளர்ச்சி தந்தைக்கு உறைக்கிறது. அக்காட்சி உண்மை போலில்லை; பெருங்கனவுபோலத் தெரிகிறது. இதுதான் அவருக்குப் பிரச்சினை. எத்தனை மூடி மறைத்துக் காலம், உணர்வு, குழப்பம் என்றெல்லாம் பேசினாலும் எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு பிரச்சினை வெளியே வந்துவிடுகிறது. பிறகென்ன? உன் கூந்தலில் முல்லைப் பூக்களின் குவியல்கள்; அவற்றுக்குத் தாயிடமிருந்து கிள்ளப்பட்ட விசனம் இல்லையா? உன் நடையின் துள்ளலில் அவை பெறும் குதூகலம் தாயிடமிருந்து அவை பெற்றதில்லையா? என்றெல்லாம் கேள்விகளை நேரடியாக முன்வைக்கிறார். மகளைப் பிரியும் துயரம் தந்தைக்கு இருக்கிறது. அப்படி ஒரு துயரம் மகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் மகள் நடையில் எப்படித் துள்ளல் வரும்? வாழ்வின் தேன் இப்படி வெளிப்படையாகப் பேசிய பிறகு அவருக்குத் தெளிவு வருகிறது. தான் துயரம் அடைவதற்கும் மகள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் காரணம் புரிகிறது. அவர் வாழ்வின் அஸ்தமனத்தில் இருக்கிறார். மகள் வாழ்வில் முழுநிலவு உதிக்கும் காலம். துயருக்கும் மகிழ்வுக்குமான காரணம் விளங்குகிறது. அப்புறம் என்ன? மனம் சமாதானம் கொள்கிறது. மகளைப் பார்த்து வாழ்த்துகிறார். வாழ்த்து இப்படி வருகிறது: ஒவ்வொரு நிமிஷமும் வாழ்வின் தேனை வண்டைப் போல் உறிஞ்சு. அருமையான வாழ்த்துதான். இவ்வுலகில் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ள நமக்கு ஒவ்வொரு நிமிஷமும் முக்கியமானது. பூவில் தேனை எத்தனை ஆவலோடு வண்டு உறிஞ்சுகிறதோ அப்படி மகிழ்ச்சியோடு வாழ்வில் இனிமை கண்டு வாழச் சொல்லும் வாழ்த்து. தந்தையின் மனக்கனிவு இவ்வாழ்த்தில் கசிந்து வெளிப்படுகிறது. இருந்தாலும் மகள் வாழ்வில் இனிமேல் தனக்கு எந்த இடமும் இல்லையோ என்னும் ஏக்கம் தந்தையின் உள்ளத்தில் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வின் தேனை வண்டைப் போல உறிஞ்சும் அந்தப் பாதையும் என்றோ ஒருநாள் முடியத்தான் போகிறது. திருமண மகிழ்வில், இளமையின் வசீகரத்தில், வாழ்வின் தேனை உறிஞ்சும் வேகத்தில் தந்தையின் நினைவு வராமல் போகலாம். இவையெல்லாம் தீர்ந்த ஒருகாலம் வருமே. அப்போது என்னைப் பற்றி அந்த இளம் மீசையிடம் (மீசை நரைத்திருக்காதா? அடையாளம்தானே) கொஞ்சம் சொல்லு என்று கேட்கிறார். உன் கடந்த காலத்தின் பழைய நினைவாய் அது இருக்கட்டும் என்கிறார். மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டாலும் மகள் பிரிவைத் தாங்காத ஒரு தந்தையின் மனநிலையை இக்கவிதை காட்டுகிறது. மகளை விளித்துப் பேசும் தந்தைக்கு மருமகனை அத்தனை எளிதாய் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ‘இளம் மீசை’ என்றே இரு இடங்களில் குறிப்பிடுகிறார். அது இளமையின் அடையாளம் என்றாலும் தந்தைக்குத் தான் இருந்த இடத்தின் பதிலி என்பதை ஏற்றுக்கொள்ள இயலாத வெறுமையின் வெளிப்பாடு என்றும் கொள்ளலாம். திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு மகளை அனுப்பி வைக்கும் தந்தையர் சிலர் கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் சிந்தி அழுவதுண்டு. இந்தத் தந்தையும் அழுதிருந்தால் அது கண்ணீரோடு முடிந்திருக்கும். இப்படிக் கவிதையாகி இராது. முழுக் கவிதை: பூக்கள் குலுங்கும் கனவு அன்று – உன் திருமணத்தன்று – நீ நின்ற நிலை ஏன் அந்தக் காட்சி என் மனத்தில் இவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கிறது அலங்காரங்களின் வசீகரம் உன் அருகே அந்த இளம் மீசை. காலமே! எதற்கு என்னை இங்கெல்லாம் அழைத்துச் செல்கிறாய்? என் உணர்வுகளில் நான் குழம்பிச் சரிகிறேனே. என்னருகே வெகுநாள் சின்னஞ்சிறு பெண்ணாக இருந்த நீ எவ்வாறு இவ்வளவு பெரிய கனவாய்ப் பந்தலில் விரிந்தாய் உன் கூந்தலில் முல்லைப் பூக்களின் குவியல்கள் அவற்றுக்குத் தாயிடமிருந்து கிள்ளப்பட்ட விசனம் இல்லையா உன் நடையின் துள்ளலில் அவை பெறும் குதூகலம் தாயிடமிருந்து அவை பெற்றதில்லையா. நான் அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நீ முழு நிலவின் விளிம்பில் பரவசம் கொள்கிறாய். ஒவ்வொரு நிமிஷமும் வாழ்வின் தேனை வண்டைப்போல் உறிஞ்சு. ஆனால் ஒன்று. அந்தப் பாதை முடிவுறும் முன்னே என்றேனும் ஒருநாள் அந்த இளம் மீசையிடம் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லு உன் கடந்த காலங்களின் பழைய நினைவாய். பின்னணி கவிதையை விளங்கிக்கொள்ளக் கவிஞரின் சொந்த வாழ்க்கைச் செய்திகள் ஓரளவுக்கு உதவும். சொந்த வாழ்வையும் படைப்பையும் இணைத்துப் பார்க்கும் முறைத் திறனாய்வு இப்போது செல்வாக்கை இழந்துவிட்டது. எனினும் வாசக ஆர்வம் அவ்வாறு இணைத்துப் பார்ப்பதைப் பெரிதும் விரும்புகிறது. சுந்தர ராமசாமியின் இக்கவிதைக்கும் அப்படியொரு பின்னணியைப் பொருத்திப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. இக்கவிதை 1985ஆம் ஆண்டு ஜூலை மாதக் ‘கொல்லிப்பாவை’ இதழில் வெளியாகியுள்ளது. சுந்தர ராமசாமியின் இரண்டாம் மகள் தைலாவின் திருமணம் 1984 ஜனவரி 27இல் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள் இக்கவிதையை அவர் எழுதியிருக்கிறார். அக்காலத்தில் பிரசுர வாய்ப்பு அரிது என்பதால் பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் ‘கொல்லிப்பாவை’யில் ஒருசேர வெளியாகியுள்ளன. ஓராண்டு காலத்திற்கு மேல் அவர் எழுதிய பல கவிதைகள் அவை. ஆகவே, ‘ஒவ்வொரு நிமிஷமும் வாழ்வின் தேனை வண்டைப் போல் உறிஞ்சு’ என்னும் வாழ்த்தைப் பெற்றவர் அவரது இரண்டாம் மகள் தைலா என ஊகிக்கலாம். பயன்பட்ட நூல்: 1. ராஜமார்த்தாண்டன் (தொ.ஆ.), சுந்தர ராமசாமி கவிதைகள், 2005, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். நன்றி: அருஞ்சொல் - 14 Oct 2023

Camera

44 ஆண்டுகளைக் கடந்த உரையாடல்

சு. விஜய் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ பொதுவான கதை வடிவில் அல்லாமல் மாறுபட்ட அமைப்பில் படைக்கப்பட்டிருக்கும் ஒரு நாவல். நாவல் வெளியாகியிருந்த 1981ஆம் ஆண்டில் தமிழ் இலக்கியத்திற்கு நிச்சயம் இது ஒரு புதிய முயற்சியாக இருந்திருக்கக்கூடும். எழுத்தாளர், முதல் முறை இந்தப் புது முயற்சியை (நான் அறிந்த வரையில்) அச்சுக்குக் கொண்டுவந்த பதிப்பகத்தார் ஆகியோரின் படைப்பு மீதான உறுதியும் நம்பிக்கையும் பாராட்டுக்குரியது. பாலு என்கிற தமிழ் எழுத்தாளர், மலையாள எழுத்தாளுமையான ஜோசஃப் ஜேம்ஸின் (ஜே.ஜே) சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவருடனான தன் அனுபவங்களையும் , அவருடைய மனைவி, நண்பர்களிடம் பேட்டி கண்டு அவர்கள் அவரைப் பற்றிப் பகிர்ந்துகொண்டவற்றையும் நாவலின் வழி வாசகர்களிடேயே சொல்லிச்செல்வதாக நாவல் புனையப்பட்டிருக்கிறது. இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாவலின் இரண்டாவது பகுதி முழுக்கவும் ஜே.ஜேவின் நாட்குறிப்பின் முக்கியமான பகுதிகளை, பாலு தொகுத்து மொழிபெயர்த்துத் தந்திருப்பதாக அமைந்துள்ளது. அதுவே ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ என்பதாகும். இந்த மாறுபட்ட அமைப்பே நாவலைப் பொதுவான கதை வடிவிலிருந்து விலக்கிப் புதிய வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. நாவலின் மையப் பாத்திரம் ஜே.ஜேதான். மேன்மையானது என்று பெரும் அறிவாளிகளாலும் சிந்தனையாளர்களாலும் முற்போக்குவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் கம்யூனிசம், கடவுள் மறுப்பு முதலிய தத்துவங்களின் மீதான அடிப்படைக் கேள்வியை எழுப்புவனவாக இருக்கின்றன மலையாள எழுத்தாளர் ஜே.ஜேவின் சிந்தனைகள். ஜே.ஜே சமூகத்தை அணுகும் விதம் பொதுப் புத்திக்குப் புதிதானது; மிகச் சிக்கலானதும், புரிந்துகொள்ளச் சற்றுச் சவாலானதும்கூட. நாவலை அவற்றை வாசிக்கும்போது அவற்றுடன் நாம் ஒத்துப்போகலாம் அல்லது அவற்றுக்கெதிரான தர்க்கம் நமக்குள் எழலாம்; அது முக்கியமல்ல. நாவல் பல தளங்களில் நம் சிந்தனையைச் செலவிடத் தூண்டுவதாகப் படைக்கப்பட்டிருப்பது நாவலின் பலம். ஒரு வாசகருக்கு எழுத்தாளரிடம் ஏற்படும் ஈடுபாடு காதலுணர்ச்சிக்குச் சிறிதும் குறைந்ததன்று. அப்படி ஜே.ஜேவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுவிடும் பாலு என்கிற தமிழ் எழுத்தாளன் கதாபாத்திரம் (கதை சொல்லி) இந்நூலின் ஆசிரியர் சுந்தர ராமசாமியின் பிரதிபலிப்பாகவே இருக்க வேண்டும். பெரும்பாலான அல்லது எல்லா எழுத்தாளருக்கும் அப்படி ஒரு வாசக பர்வம் இருக்கவே செய்யும். ஒரு வாசகனாக ஜே.ஜேவைச் சந்திக்க, உரையாட என்று பாலுவுக்குள் எழும் தவிப்புகள், பின் பாலுவும் ஒரு எழுத்தாளனான பிறகு ஜே.ஜேவைச் சந்தித்துப் பேசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நிகழ்பவை, ஜே.ஜே இல்லாத இடங்களில் ஜே.ஜே இருந்திருந்தால் இப்படிப் பேசியிருப்பான் என்று அவன் மன ஓட்டத்தை அறிந்து வைத்திருத்தல், ஜே.ஜே இறந்த பிறகு அவனுடைய நாட்குறிப்பின் பகுதிகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்து அவனுடைய சிந்தனைகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமென அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் என பாலு கதாபாத்திரம் நல்ல முறையில் வந்திருக்கிறது. ஒரு நாவல் ஒரு வாழ்க்கையைக் காட்டிச் செல்வதாக அமைக்கப்படும். அதுவே பொதுவான அல்லது பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கும் நாவல் வடிவம். அவை வாசகரை உணர்வுரீதியாகத் தழுவ முற்படுபவை (நான் வாசித்த அல்லது கேள்வியுற்ற சொற்ப எண்ணிக்கையின் அடிப்படையில்). ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையின் சில பகுதிகள் , சிந்தனைகள் , தத்துவங்கள் இன்ன முறையென்று அல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்நாவலில் கடத்தப்பட்டிருப்பதால் ஒரு எழுத்தாளருடைய வாழ்வியலைச் சுருங்கச் சொல்வதாகக் கொள்ளலாம். ஆனால், உணர்வுரீதியாக அல்லாமல் இந்த நாவல் அறிவு சார்ந்தும், தத்துவங்கள், சிந்தனைகள் சார்ந்தும் பெரும்பாலும் பயணிக்கிறது; நூல் வடிவத்தைக் கடந்து, இந்த நாவல் மற்ற நாவல்களிலிருந்து தனித்துத் தெரிவது இந்த இடத்தில்தான். எழுத்தாளர்களின் வாழ்க்கை, இரு எழுத்தாளர்களின் சந்திப்பு, அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் - விவாதங்கள், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள், கூட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளை வாசிக்க நேர்கையில் இயல்பாக உள்ளூரப் பரவசம் கொள்ளும் வாசகன் நான். அப்படிப் பரவசமான அனுபவங்கள் நிறைய கிடைக்கப் பெற்றேன் இந்த நாவலில். எந்த ஒரு துறையிலும் புதுமையான முயற்சிகள் வந்துகொண்டிருப்பது முக்கியம்; அந்த முயற்சி அந்தத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமெனில் அது வெற்றி பெற வேண்டும் என்பதே அதிமுக்கியம். அவ்வகையில் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ இலக்கியத்தில் வெற்றி கண்ட புது முயற்சி என்பேன். ஒரு நாவல் படைக்கப்பட்டு 44 ஆண்டுகள் கடந்தும், அந்தத் தலைமுறை வாசகருடன் ஓர் அர்த்தமுள்ள, அவர் சிந்தனையை முடுக்கக்கூடிய வகையில், அவரைக் கேள்விக்குள்ளாக்கிப் பதிலைத் தேடச் செய்யும்படியான ஒரு உரையாடலை நிகழ்த்த முடியுமெனில் அது வெற்றிதானே. நன்றி: (சு. விஜய்யின் முகநூலிலிருந்து) https://www.facebook.com/story.php?story_fbid=1339417051200007&id=100053951742139&rdid=0HR4sZ25c1R18cBI#

Camera

சுந்தர ராமசாமியின் ‘ரத்னபாயின் ஆங்கிலம்’

ராஜம் ரஞ்சனி 1886 ஆம் ஆண்டு மேற்கத்திய மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆனந்தி கோபால் ஜோஷி. மார்ச் 31ம் நாள் 1865ஆம் ஆண்டு மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண் எனும் சிறு பட்டணத்தில் பிறந்தவரான இவர், ஒன்பது வயதில் அஞ்சல் குமாஸ்தாவாக பணியாற்றிய கோபால் ஜோஷிக்கு மணமுடிக்கப்பட்டார். முற்போக்குவாதியான கோபால் ஜோஷி பெண் கல்வியை ஆதரிப்பவராக இருந்தார். திருமணத்திற்குப் பின் ஆனந்தியின் கல்வியைத் தொடர ஊக்குவித்தார். ஆனந்தி தன் பதினான்காம் வயதில் ஆண் சிசுவை ஈன்றெடுத்தார். போதிய மருத்துவ வசதி இல்லாததால் குழந்தை பத்து நாள்களில் இறக்க நேரிட்டது. இந்தத் துயர சம்பவமே ஆனந்தி மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்க முக்கிய தூண்டுகோலாய் உருவெடுத்தது. கோபால் ஜோஷியின் ஊக்குவிப்பினால் பலவித இன்னல்களைக் கடந்து ஆனந்தி மருத்துவப்படிப்பை வெற்றிக்கரமாக முடித்து 11 மார்ச் 1886ம் நாளன்று பட்டம் பெற்றார். கமலா சோஹோனி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப்பெண். தன் இளங்கலை பட்டப்படிப்பை பெளதிகம், வேதியயல் துறையில் முதல் நிலையில் தேறியவர் மேற்கொண்டு ஆய்வுத்துறையில் ஈடுபட எண்ணி ஆய்வு மையத்திற்கு விண்ணப்பித்தபோது அவர் பெண் என்ற காரணத்தினால் மட்டுமே அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பெண்கள் ஆய்வுத்துறையில் ஈடுபடத் தொடங்காத காலம் அது. பெண் என்ற ஒரே காரணத்தால் தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைக் கமலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போராட்டங்களுக்குப் பின்னர் ஆய்வு மையத்தில் ஒரு வருட பயிற்சிக்கால நிபந்தனையின்படி நுழைய அனுமதிக்கப்பட்டார். ஒரு வருட பார்வையில் கமலாவின் பணி திருப்தியளிக்கும்படி இருந்ததால் உயிரியல் வேதியல் துறையில் ஆய்வுப்பணியைச் செய்ய அனுமதிக்கப்பட்டார். இந்திய பெண்கள் என்றோ தங்கள் லட்சியங்களைச் சாதிக்க தொடங்கிய பாதச்சுவடுகளாக இவற்றை கருதலாம். ஆனாலும் எல்லா பெண்களின் லட்சியங்களும் நிறைவேறுவதில்லை. லட்சியங்களைத் தவிர்த்து குடும்பமும் பெண்களின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாய் திகழ்கின்றது. ஆனால் ரத்னபாயின் வாழ்க்கை வெறுமையானது. கணவனோ பிள்ளைகளோ மகிழ்ச்சிக்கு வித்திட்டதில்லை. மாறாக வாழ்க்கையின் துன்பத்தை மேலும் அதிகமாக்கிவிட்டிருகின்றார்கள். வெறுமை நிறைந்த தன் வாழ்க்கையிலும் ரத்னபாய் தன் தோழி அம்புவுக்குக் கடிதம் எழுதுகின்றாள். எதற்காக எதைப்பற்றி கடிதம் எழுதுகின்றாள் என்பதை அறிய நினைத்தால் இன்னும் ஆச்சர்யமாக இருக்கும். தான் வாங்கியிராத பட்டுப்புடவையைப் பற்றி வர்ணித்து எழுதுகின்றாள். ராதையின் அழகும் கண்ணனின் கானமும் கலந்து வண்ணங்களாய் பட்டுபுடவையில் பரவ செய்தவனைக் கலைஞனென புகழ்கின்றாள். இத்தகைய வர்ணிப்புகளுடன் ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதுகின்றாள். கடிதத்தைப் படித்த தோழி அவளுடைய ஆங்கிலத்தை மெச்சுகின்றாள். தனக்கும் தன் தோழிகளுக்கும் அதே போன்ற புடவைகளை வாங்கி அனுப்புமாறு கேட்டு கொள்கின்றாள். சேலைகளை வாங்கி வைத்து விட்டு மீண்டும் ஆங்கிலத்திலேயே தோழிக்குப் பதில் அனுப்புகின்றாள். எழுதிய கடிதத்தைப் பலமுறை படித்துப் பார்க்கின்றாள். இது சுந்தர ராமசாமியின் ‘ரத்னபாயின் ஆங்கிலம்’ என்ற கதை. குடும்ப மகிழ்ச்சியே தங்களின் இன்பமாக கருதும் பெண்களுக்கு அத்தகைய மகிழ்ச்சி கிடைக்காத பட்சத்தில் வாழ்க்கை வெறுமையாய் தோன்றுகின்றது. அதை நிரப்பிக் கொள்ள அவர்களுள் இருக்கும் ஏதோ ஒரு விஷயத்தை வெளி கொணரவே விரும்புகின்றனர். அது சிறிய விஷயமாக இருந்தாலும் கூட அதையே வாழ்க்கையின் அர்த்தமாக்கி கொள்ள தயாராகின்றனர். “பாஷை ஒரு அற்புதம். கடவுளே உனக்கு நன்றி” என்றாள்.“இல்லாவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்றாள். கதை முற்று பெறுமுன் இவ்வரிகள் வருகின்றன. அவளது வாழ்க்கையின் முழு திருப்தியையும் மகிழ்ச்சியையும் இவ்வரிகள் எடுத்துரைக்கின்றன. அவளது ஆங்கில புலமை மட்டுமே அவளுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைக் கற்பிப்பதாய் உள்ளது. அது மட்டுமே அவளது திறன். அதை உணர்ந்து கொண்டவளாய் அதை மட்டுமே எண்ணி எண்ணி மனம் மகிழ்கின்றாள். தன் வாழ்க்கை குறைகளை அவள் கொட்டி தீர்க்கவில்லை. மாறாக வாழ்க்கையின் திருப்தியைத் தொட முயற்சிகின்றாள். பெரும்பாலும் மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் கண்களுக்கு நிறைகள் இருந்தும் குறைகளே அதிகமாக தெரிகின்றன. திருப்தியைத் தொட முயற்சித்தால் நிறைகள் வெளிபடும் தருணங்கள் அதிகம். நன்றி: வல்லினம். காம் – ஜூன் 1, 2014

Camera

44 ஆண்டுகளைக் கடந்த உரையாடல்

சு. விஜய் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ பொதுவான கதை வடிவில் அல்லாமல் மாறுபட்ட அமைப்பில் படைக்கப்பட்டிருக்கும் ஒரு நாவல். நாவல் வெளியாகியிருந்த 1981ஆம் ஆண்டில் தமிழ் இலக்கியத்திற்கு நிச்சயம் இது ஒரு புதிய முயற்சியாக இருந்திருக்கக்கூடும். எழுத்தாளர், முதல் முறை இந்தப் புது முயற்சியை (நான் அறிந்த வரையில்) அச்சுக்குக் கொண்டுவந்த பதிப்பகத்தார் ஆகியோரின் படைப்பு மீதான உறுதியும் நம்பிக்கையும் பாராட்டுக்குரியது. பாலு என்கிற தமிழ் எழுத்தாளர், மலையாள எழுத்தாளுமையான ஜோசஃப் ஜேம்ஸின் (ஜே.ஜே) சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவருடனான தன் அனுபவங்களையும் , அவருடைய மனைவி, நண்பர்களிடம் பேட்டி கண்டு அவர்கள் அவரைப் பற்றிப் பகிர்ந்துகொண்டவற்றையும் நாவலின் வழி வாசகர்களிடேயே சொல்லிச்செல்வதாக நாவல் புனையப்பட்டிருக்கிறது. இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாவலின் இரண்டாவது பகுதி முழுக்கவும் ஜே.ஜேவின் நாட்குறிப்பின் முக்கியமான பகுதிகளை, பாலு தொகுத்து மொழிபெயர்த்துத் தந்திருப்பதாக அமைந்துள்ளது. அதுவே ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ என்பதாகும். இந்த மாறுபட்ட அமைப்பே நாவலைப் பொதுவான கதை வடிவிலிருந்து விலக்கிப் புதிய வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. நாவலின் மையப் பாத்திரம் ஜே.ஜேதான். மேன்மையானது என்று பெரும் அறிவாளிகளாலும் சிந்தனையாளர்களாலும் முற்போக்குவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் கம்யூனிசம், கடவுள் மறுப்பு முதலிய தத்துவங்களின் மீதான அடிப்படைக் கேள்வியை எழுப்புவனவாக இருக்கின்றன மலையாள எழுத்தாளர் ஜே.ஜேவின் சிந்தனைகள். ஜே.ஜே சமூகத்தை அணுகும் விதம் பொதுப் புத்திக்குப் புதிதானது; மிகச் சிக்கலானதும், புரிந்துகொள்ளச் சற்றுச் சவாலானதும்கூட. நாவலை அவற்றை வாசிக்கும்போது அவற்றுடன் நாம் ஒத்துப்போகலாம் அல்லது அவற்றுக்கெதிரான தர்க்கம் நமக்குள் எழலாம்; அது முக்கியமல்ல. நாவல் பல தளங்களில் நம் சிந்தனையைச் செலவிடத் தூண்டுவதாகப் படைக்கப்பட்டிருப்பது நாவலின் பலம். ஒரு வாசகருக்கு எழுத்தாளரிடம் ஏற்படும் ஈடுபாடு காதலுணர்ச்சிக்குச் சிறிதும் குறைந்ததன்று. அப்படி ஜே.ஜேவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுவிடும் பாலு என்கிற தமிழ் எழுத்தாளன் கதாபாத்திரம் (கதை சொல்லி) இந்நூலின் ஆசிரியர் சுந்தர ராமசாமியின் பிரதிபலிப்பாகவே இருக்க வேண்டும். பெரும்பாலான அல்லது எல்லா எழுத்தாளருக்கும் அப்படி ஒரு வாசக பர்வம் இருக்கவே செய்யும். ஒரு வாசகனாக ஜே.ஜேவைச் சந்திக்க, உரையாட என்று பாலுவுக்குள் எழும் தவிப்புகள், பின் பாலுவும் ஒரு எழுத்தாளனான பிறகு ஜே.ஜேவைச் சந்தித்துப் பேசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நிகழ்பவை, ஜே.ஜே இல்லாத இடங்களில் ஜே.ஜே இருந்திருந்தால் இப்படிப் பேசியிருப்பான் என்று அவன் மன ஓட்டத்தை அறிந்து வைத்திருத்தல், ஜே.ஜே இறந்த பிறகு அவனுடைய நாட்குறிப்பின் பகுதிகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்து அவனுடைய சிந்தனைகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமென அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் என பாலு கதாபாத்திரம் நல்ல முறையில் வந்திருக்கிறது. ஒரு நாவல் ஒரு வாழ்க்கையைக் காட்டிச் செல்வதாக அமைக்கப்படும். அதுவே பொதுவான அல்லது பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கும் நாவல் வடிவம். அவை வாசகரை உணர்வுரீதியாகத் தழுவ முற்படுபவை (நான் வாசித்த அல்லது கேள்வியுற்ற சொற்ப எண்ணிக்கையின் அடிப்படையில்). ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையின் சில பகுதிகள் , சிந்தனைகள் , தத்துவங்கள் இன்ன முறையென்று அல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்நாவலில் கடத்தப்பட்டிருப்பதால் ஒரு எழுத்தாளருடைய வாழ்வியலைச் சுருங்கச் சொல்வதாகக் கொள்ளலாம். ஆனால், உணர்வுரீதியாக அல்லாமல் இந்த நாவல் அறிவு சார்ந்தும், தத்துவங்கள், சிந்தனைகள் சார்ந்தும் பெரும்பாலும் பயணிக்கிறது; நூல் வடிவத்தைக் கடந்து, இந்த நாவல் மற்ற நாவல்களிலிருந்து தனித்துத் தெரிவது இந்த இடத்தில்தான். எழுத்தாளர்களின் வாழ்க்கை, இரு எழுத்தாளர்களின் சந்திப்பு, அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் - விவாதங்கள், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள், கூட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளை வாசிக்க நேர்கையில் இயல்பாக உள்ளூரப் பரவசம் கொள்ளும் வாசகன் நான். அப்படிப் பரவசமான அனுபவங்கள் நிறைய கிடைக்கப் பெற்றேன் இந்த நாவலில். எந்த ஒரு துறையிலும் புதுமையான முயற்சிகள் வந்துகொண்டிருப்பது முக்கியம்; அந்த முயற்சி அந்தத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமெனில் அது வெற்றி பெற வேண்டும் என்பதே அதிமுக்கியம். அவ்வகையில் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ இலக்கியத்தில் வெற்றி கண்ட புது முயற்சி என்பேன். ஒரு நாவல் படைக்கப்பட்டு 44 ஆண்டுகள் கடந்தும், அந்தத் தலைமுறை வாசகருடன் ஓர் அர்த்தமுள்ள, அவர் சிந்தனையை முடுக்கக்கூடிய வகையில், அவரைக் கேள்விக்குள்ளாக்கிப் பதிலைத் தேடச் செய்யும்படியான ஒரு உரையாடலை நிகழ்த்த முடியுமெனில் அது வெற்றிதானே. நன்றி: (சு. விஜய்யின் முகநூலிலிருந்து) https://www.facebook.com/story.php?story_fbid=1339417051200007&id=100053951742139&rdid=0HR4sZ25c1R18cBI#

Camera

சுந்தர ராமசாமி படைப்புலகம்

ராஜமார்த்தாண்டன் கலைஞன் பதிப்பகம் வெளியீடு சுந்தர ராமசாயின் படைப்புலகை நேர்த்தியாக அறிமுகப்படுத்தும் நூல் இது. சு.ரா.வின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகள், நாவல்களின் சில பகுதிகள், சில கவிதைகள், கட்டுரைகள், உரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த நூல், பல தளங்களில் இயங்கிய சுந்தர ராமசாமியின் எழுத்தின் வீச்சை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

Camera

இந்திய இலக்கியச் சிற்பிகள்

சுந்தர ராமசாமி,அரவிந்தன் சாகித்திய அகாதெமி வெளியீடு சுந்தர ராமசாயின் வாழ்வையும் இலக்கியத்திற்கும் மொழிக்கும் அவர் செய்த பங்களிப்பையும் விரிவாகக் கூறும் நூல் இது. சு.ரா.வின் படைப்புலகம் குறித்த விரிவான அலசல்கள் இதில் உள்ளன. சு.ரா.வின் ஆளுமையைப் பற்றிய பகுதியும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. அவருடைய ஆளுமைக்கும் இலக்கியச் செயல்பாடுகளுக்கும் இடையிலுள்ள உறவையும் இந்நூல் சுட்டுகிறது.

Camera

சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை

ராஜமார்த்தாண்டன் காலச்சுவடு வெளியீடு கவிஞரும் விமர்சகருமான ராஜமார்த்தாண்டன் சுந்தர ராமசாமியின் கவிதைகள்மீதான தன்னுடைய வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். சு.ரா.வின் கவிதைகளைப் பற்றிய விரிவான சித்திரங்களை இந்நூலில் காணலாம். கவிதையியல் குறித்த நூல் என்ற முறையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது.

Camera

ஒளியில் வடியும் படிமம்

புதுவை இளவேனில், அரவிந்தன் சுந்தர ராமசாமியின் புகைப்படங்கள், அவருடைய சிந்தனைத் தெறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பு. புகைப்படங்கள் சு.ரா.வின் சிந்தனைகளின் காட்சிப் படிமங்களாக உருக்கொள்ளும் அனுபவத்தை இந்தப் புகைப்பட – சிந்தனைத் தொகுப்பில் காணலாம்.

மாதிரிக்குச் சில பக்கங்கள்: