கிணற்றை மூழ்கடித்த வெள்ளம்: ஜே.ஜே: சில குறிப்புகள்

ஸ்ரீதர் நாராயணன்

1978க்கு முன்னால் எழுதப்பட்ட இந்த நூலைப் பற்றி 2023ஆம் ஆண்டில் நாம் பேசுவதற்கான தேவை இந்த நாவலிலேயே இருக்கின்றது. இந்த நாவலின் எழுத்தாளரும், அதில் படைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளரும், அவர்களின் தீர்க்கதரிசனமாக முன்வைப்பது, 90களுக்குப் பிறகு, தமிழ் இலக்கியம் தன்னுடைய குறுகிய எல்லைகளைக் கடந்து பரந்த வெளியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்பதுதான். '21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டிற்குள், ஒரு தவளைகூடக் கிணற்றுக்குள் இருக்க முடியாது. அப்படிப் பிடிவாதமாக வெளிவராதவை உயிர் மூச்சற்று அழிந்து போகும்" என்கிறார் எழுத்தாளர். அதாவது கிணற்றுத் தவளைகள் உலகளாவியத் தவளைகளாக ஆகிவிடும் என்பது எழுத்தாளரின், ஜே.ஜே.வின் முடிபு.

இந்தியப் பண்பாட்டு விசாரமும் மேற்கத்தியத் தர்க்க சிந்தையும் ஜே.ஜே.வின் எழுத்தின் சாரமாக, பாலுவால் அடையாளப்படுத்தப்படுகின்றன.

கோபாலகிருஷ்ண அடிகா, குட்டிக்கிருஷ்ண மாரார் என்று இந்தியப் பெருநிலத்தின் ஒரு பெரும் முன்னோடி எழுத்தாளர் பரிவாரத்தை, மொழிகளைக் கடந்து இந்தச் சிந்தனைப் பிரவாகத்தை எப்படி இந்திய மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்கிற ஆற்றாமையின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் இந்த நாவல் என்று குறிப்பிடுகிறார்.

இந்த நாவலில் இடம்பெறும் உதாரண எழுத்தாளரான ஜே.ஜே.விலிருந்து ஏனைய பல எழுத்தாளுமைகளுக்கு ஒரு முன்மாதிரி நிஜங்கள் உண்டு. முல்லைக்கல் மாதவன் நாயர், முளங்காடு கிருஷ்ண வைத்தியர் ஐயப்பன், திருச்சூர் கோபாலன் நாயர் எனப் பலரும் மலையாள எழுத்துலகின் உண்மையான முகங்கள் என்று பல விமர்சனக் குறிப்புகளிலிருந்து அறிகிறோம். அந்தவகையில் இதன் கதைசொல்லி பாலுவின் எண்ணவோட்டங்களுக்கு ஒரு தீர்க்கமான பின்புலம் நமக்குப் புலனாகின்றது. ஒரு அனுபவக் குறிப்பு, அல்லது பத்திரிகைச் செய்தி என எடுத்துக்கொண்டு அதை ஜே.ஜே.வின் பார்வையில் விவரித்துக்கொண்டே, பாலுவின் பார்வையினூடே செல்கிறது நாவல். பாலுவின் ஆதர்சம் ஜே.ஜே. என்றால், ஜே.ஜே.யின் நிர்த்தாட்சண்யமான எழுத்துத் தீவிரம் பாலுவிடம் படிந்திருக்க வேண்டும். ஆனால் எழுத்தாளரால் அந்த இடத்தை விலகியிருந்து ஆராதிக்க மட்டுமே முடியும் என்பதால், ஜே.ஜே.வும் பாலுவுமாக இணைகோடுகளுக்கிடையே ஒரு தர்க்கப்பூர்வ உணர்ச்சித் தத்தளிப்பை நிகழ்த்துகிறார் நாவலாசிரியர். இந்த அனுபவக் குறிப்புகளின் மேல் நிகழ்த்தப்படும் தத்துவ விசாரணைகள், அவை நிகழ்ந்த பின்புலன்கள் பற்றிய மேலதிகத் தகவல்கள், அவற்றிடையேயான எழுத்தாளரின் அகப்பயணம், இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும் அழகியல் என்று ஒரு கலாப்பூர்வ நிறைவைக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.

நோயுற்றிருந்த இளம்பருவத்தில், புனைவுலகை அடைக்கலமாகக் கொண்ட, கற்பனாவாத இளைஞனுக்கு, ஜே.ஜே.வின் ஆண்-பெண் உறவு பற்றிய கட்டுரை ஒன்று பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மாய்மாலங்களும் பொய்முகங்களும் எவ்விதச் சமரசங்களும் அற்ற, ஏளனங்களும் நுண் கேலிகளும் செறிந்த அப்பட்டமான எழுத்து. ஒருவகையில் ஜே.ஜே.வின் பரிச்சயம் பாலுவைக் கற்பனாவாதச் சூழலிலிருந்து தரைக்கு இழுத்து வருகிறது. அதொரு கிராஷ் லேண்டிங் போன்ற நிலைகுலையவைக்கும் தரையிறக்கம். அதைத் தொடர்ந்து பாலு தன்னுடைய சிறுவயதில், தன் சகோதரியுடனான பால்ய விளையாட்டைப் பகுத்தாராய முற்படுகிறார். ஒரு நெருக்கடி நிலை அளிக்கும் உந்துதலும், அதைச் சமாளிக்க முற்படும்போது உண்டாகும் தீவிரத்தின் பரவச நிலையும் ஒரு பகுதி. அதன் வழியே அடையும் வெற்றியினால் உண்டாகும் மகிழ்ச்சி. இடையே அந்தப் பாவனை உலகு விலகி, கனவுகள் பிடுங்கப்படும்போது உண்டாகும் அவஸ்தை. இந்த மூன்று பகுப்புகளை நம் வாழ்வின் எந்தவிதப் பகுதிகளுக்கும் நாம் பொருத்திக்கொள்ள முடியும். நாராயண குருவின் சீடரான சத்தியானந்தரின் ஆசிரமத்தில் பாலுவின் உடல் நோய்களுக்குச் சிகிச்சைகள் நடக்கின்றன. சத்தியானந்தரின் மானுட சேவையில் தன்னைக் கரைத்துக்கொள்ளும் உன்னத நோக்கம் எவ்வளவு தூரத்திற்குப் பயன்தரும் பெறுமானத்தைக் கொண்டது என்ற நிதர்சனம் பாலுவிற்கு உறைக்கிறது. சத்தியானந்தரின் தீர்க்கமான ஒருமுகப்பட்ட நோக்கிற்கு எதிர்மாறாக, அனைத்திலும் அலைக்கழிக்கப்படும், எதிலும் கொஞ்சம் நம்பிக்கையும், தொடர்ச்சியான தேடுதலையும் கொண்டவனாக, தன்னை உணர்கிறார் பாலு, முக்கியமாக தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜே.ஜே.வால், அவனுடனான சந்திப்புகளால், அவனுடனான கருத்துப் பரிமாற்றங்களால் தன்னை நிறைவு செய்துகொள்ள முடியும் என பாலு நம்புகிறார். பதிலுக்கு இவரால் தமிழிலக்கியத்தின் உச்சத்தை ஜே.ஜே.விற்குக் கடத்திவிட வேண்டும் என்பது பாலுவின் விழைவு.

‘ஜே.ஜே.வைச் சந்திக்கச் செல்லும் எழுத்தாளர் மாநாட்டில் திருச்சூர் கோபாலன் நாயரைச் சந்திக்கின்றார். அவருடைய ஆதர்ச எழுத்தாளரின் தளத்தில் இருப்பவரல்லர் அவர். முற்போக்குச் சரித்திர நாவல் என்ற பெயரில் பிற்போக்கான படைப்பை உருவாக்கியவர் என்பது பாலுவின் கணிப்பு. அதற்கேற்றார்ப்போல அவருடைய ஆதர்சமான ஜே.ஜே.வின் எழுத்து, கோபாலன் நாயருக்கு அந்நியமாக இருக்கிறது. அங்கே ஒரு புத்தகக் கடையில் வைத்து ஜே.ஜே.வை முதன்முதலாகப் பார்க்கிறார் பாலு. சேர்த்தலை கிருஷ்ண ஐயர், முன்ஷி வேலுப் பிள்ளை போன்றோரின் பேச்சுக்களைவிட ஜே.ஜே.வின் பேச்சு இளைஞர்களை ஈர்க்கிறது. பாலுவும் அறிமுகப்படுத்தப்படுகிறார். அப்பொழுதுதான் ஜே.ஜே.யின் புகழ்பெற்ற வாசகமான “சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?" கிண்டலை பாலு எதிர்கொள்கிறார். அது அன்றைய தீவிர இலக்கியச் சூழலில் கல்கியைக் கேலி செய்யும் போக்கின் எதிரொலி. புதுமைப்பித்தனைப் பற்றி பாலு பிரஸ்தாபிக்க முற்படும்போது, முல்லைக்கல் மாதவன் நாயரின் வருகையோடு அந்தச் சந்திப்பு முடிந்து போகிறது.

ஒருமாத விடுமுறையில் ஊர் வந்த எனக்கு, பகலில் பெரும்பாலும் ஓய்வின்றிப் பணிகள்! இரவிலோ மனைவியோடு ஆற்ற வேண்டிய கடமைகளின் தவிர்க்க முடியாமை வேறு! இதையெல்லாம்விட மேலாக அந்தப் புத்தகத்தை படிக்க வேண்டிய மனநிர்ப்பந்தம் இன்னொருபுறம்! வேறுவழியின்றி அந்நாவலை வாசிப்பதற்கென நான் வகுத்துக்கொண்ட நேரம், நள்ளிரவு ஒருமணிக்கு மேல். எங்கள் ஊரில் அந்தக் காலக்கட்டத்தில் மின்சாரத் தடையும், குறையழுத்த மின்சாரத் தொல்லையும் சகஜம்.தொடர்ச்சியான இந்தக் குறைபாடுகள் எங்களுக்குப் பழகிக்கூட இருந்தது. சொல்லப்போனால் இரவு பத்து மணிக்குப் பிறகு நள்ளிரவு ஒரு மணிவரை அது தேவையும் இருக்காது. விளக்கை வலிய அணைத்துவிடும் நேரம் அது! தமிழனின் கலாச்சாரப்படி தாம்பத்தியம் இருளில்தான் ஜொலிக்கிறது! நள்ளிரவில் படிக்கவென்று கிளம்பும்போது வெளிச்சமில்லாது என்ன செய்வது? இருளில் வாசிக்கும் மந்திரமும் தெரியாதவன் நான்! வித்தைக்காரர்கள் யாரிடமாவது அதைக் கற்றிருக்கலாம்!

சூரியனை நோக்கிப் பறக்க முற்படுவதற்கும், கூரை மேலேறிக் கூவும் கோழியின் நிலைப் பற்றியுமான பாலுவின் விசாரம் தொடர்கிறது. ஜே.ஜே. தன்னுடைய நெருக்கடிக் காலத்தில் மிகுந்த உந்துதலோடு செயல்பட்டிருக்கிறான். ஆனால் வேதனைகளுக்கும் வறுமைக்கும் மத்தியில்தான் எழுத்து பரிமளிக்க வேண்டுமென்பதில்லை. சிந்தனை பீறிடும் எழுத்தைப் படைப்பிலக்கியமாக ஏன் கொள்ள முடியாது என்பது பாலுவின் கேள்வி.

ஜே.ஜே.வின் எழுத்தில் எம்.கே. அய்யப்பனின் தாக்கத்தைப் பற்றி பாலு குறிப்பிடுகிறார். எம்.கே. மார்க்சியவாதி. இந்திய மரபுச் சிந்தனைக்கு மாறான போக்கைக் கொண்டவர். அதிர்ச்சி மதிப்பீடுகள் கொண்ட நிலைகுலைய வைக்கும் நோக்குடன் எழுதுவதை விட, ஒரு சமூக அமைப்பை மாற்றிப்போடும் விஞ்ஞான நோக்குடன் எழுத வேண்டிய அவசியத்தைப் பற்றி அவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்ததாக ஜே.ஜே.வின் நாட்குறிப்புகள் சொல்கின்றன என பாலு குறிப்பிடுகிறார். இந்த நாட்குறிப்புகள் பிற்பாடு பத்திரிகைக்கான எழுத்துப் பிரதிகளாக வடிவம் பெற்றிருக்கின்றன. நேர் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட கேள்விகளின் மீது ஜே.ஜே.யின் எழுத்து விவாதங்களைக் கட்டியெழுப்புகின்றன.

வறுமையுற்ற சூழலில்தான் கலைப் படைப்பூக்கத்தின் உன்னதத்திற்கான வழி பிறக்குமென்றால், வறுமையும் வேண்டாம் கலையும் வேண்டாம் என்று ஆதுரத்துடன் சொல்லும் ஜே.ஜே. கலையைக் காசாக்க மட்டுமே பயன்படுத்தும் வணிக மனநிலைமீது சிறிதும் மதிப்புக் கொள்வதில்லை. இந்தச் சட்டகத்தை ஜே.ஜே. வழியே பாலுவும், பாலுவின் வழியே கதாசிரியனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே வருகின்றனர்.

கிருஷ்ண ஐயரின் ஒன்பது வயதுப் பேத்தி, புல்வெட்ட வரும் கிழவன் ஒருவரின் சொந்தக் கதையைக் கேட்டுக்கொண்டே அவர் வேலையை முடித்துக்கொண்டு போகும்போது அவருடன் போய்விடுகிறாள். "அவர் ஒரு பாதி கதையைச் சொல்லி முடிப்பதற்குள் அவர் வேலை முடிந்து கிளம்பிவிட்டார். மறுபாதியைக் கேட்க அவருடன் போய்விட்டு வந்தேன்" என்று அவள் விளக்குவதைக் கேட்காமல் வீட்டார் அந்த சிறுமியைப் போட்டு மொத்துகின்றனர். இந்தச் சம்பவத்தை ஜே.ஜே.யின் நாட்குறிப்புகளிலிருந்து படிக்கிறார் பாலு. கூடவே ஜே.ஜே.யின் மனைவி சரசம்மா "அந்தப் பெண் புத்திசாலி. இன்னமும் கூட நேரம் கழித்து வந்திருக்க வேண்டும்" என்று சொல்கிறாள்.

ஏஜி சோமன் நாயர்: சந்திக்க ஜே.ஜே. வரும்போது பாலு வாசகநிலையிலிருந்து சற்று முன்னேறிச் சிறுகதைகள் எழுத்தாளனாகிவிட்டான். இப்போது பாலுவிற்கு ஜே.ஜே.யுடன் முரண்படும் புள்ளிகளும், அப்படி முரண்படுவதற்கு அவனுக்கான நியாயங்களும் தெரியத் தொடங்கிவிட்டன. ஆனாலும் ஜே.ஜே.தான் தன்னைப் பழமைவாத வரம்புக்குள்ளிருந்து உந்தித் தள்ளி வெளிப்பட வைத்தது என்ற நம்பிக்கையில் மாற்றமில்லை. அவன் உறக்கத்தைக் கலைத்து, சுரணைக் கெட்டதனத்தையும் தடித்தனத்தையும் குத்திக்காட்டி உணரச் செய்ததே ஜே.ஜே.வின் எழுத்துத்தான்.

அடுத்து ஓர் எழுத்தாளர் மாநாட்டைப் பற்றி பாலு விவரிக்கும்போது, பாலுவும் ஓர் எழுத்தாளனாக அங்கீகாரம் பெற்று அந்த மாநாட்டின் விருந்தினராகக் கலந்துகொள்கிறான். அப்போது ஆல்பேர் காம்யு இறந்த செய்தி வருகிறது. தொடர்ந்து ஜே.ஜே.வின் மரணச் செய்தியும். இந்துசூடன், கே.பி. கங்காதரன், தாமரைக்கனி, பசவப்பா என பல்வேறு எழுத்துலகத் தொடர்புகளிடையே தன் ஆதர்சத்தின் இறப்பை எழுத்தாளர் கடந்து செல்லும் காட்சி சுவைபடச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதுவரை ஜே.ஜே.வை மையமாகக் கொண்டு பாலுவின் அகப்பயணமாக நகரும் நாவல், மெல்ல பாலுவின் புறவுலகை அவனுடைய சுயபச்சாதாபமும் அங்கதமும் கலந்த விவரணையில் வாசகர்களுக்குப் புலனப்படுகிறது. ஜே.ஜே.வின் மறைவிற்காகத் தன்னுடைய இரங்கலை இவ்வுலகிற்குத் தெரிவிக்கத் தத்தளிக்கும் ஓர் எழுத்தாளனாகப் பரிணாமம் அடைகிறான்.

ஜே.ஜே.வுடனான எழுத்தாளரின் நினைவோடை தொடர்கிறது. நாம் ஒரு சம்பவத்தை நினைவடுக்குகளில் இருந்து மீட்டெடுக்கும்போது அதன் மீதான புதிய புரிதல்களும் திறப்புகளும் உண்டாகிறது. பாலுவிற்கும் அவர் தகப்பனார் எஸ். ஆர். எஸ்ஸுக்கும் அறிமுகமாகியிருந்த சம்பத்தின் நாட்டகத்திற்குச் செல்லும்போது ஜேஜே-வை பாலுவின் அப்பா பார்த்தது பற்றி அடுத்த அத்தியாயம் பேசுகிறது. காலத்தின் இடைவெளியிலோ, அல்லது தூரத்தின் இடைவெளியிலோ ஒரு காட்சி நமக்கு நன்றாகத் துலக்கமடைகின்றது என்று ஜேஜே சொல்வது அசோகமித்திரனின் நாவலில் வரும் கூற்றை ஒட்டி இருப்பதாகத் தெரிகின்றது. நெருக்கத்தில் புலனாகாத பல நுணுக்கங்கள் அகல்கையில் உயிர்பெற்று நம்மை இழுத்துப் பிடிக்கின்றன. ஜேஜே-வை ஓர் ஓவியனாக எழுத்தாளர் கண்டடையும் இடம் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. இத்தனைக்கும் அவர் அப்பாவுடனான அந்தப் பயணத்தில் அவர் இடம்பெறவில்லை. ஒரு அப்ஸ்ட்ராக்ட் (நுண்புல) வகை ஓவியத்தைக் காட்சிப்படுத்தும் அத்தியாயம் ஒரு சிறிய அப்ஸ்ட்ராக்ட் உத்தியுடன் சொல்லப்பட்டிருக்கின்றது. அது ஒரு சிறிய மறைமுக பொத்தான் (ஸ்விட்ச்) போல சரளமான விவரணைப் பகுதிக்கிடையே பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றது எனலாம்.

பாலுவிற்கு ஜேஜே போல, ஜேஜேவிற்கு ஓர் பெரும் அகத்தூண்டுதலாக அரவிந்தாட்ச மேனன் நாவலில் சொல்லப்படுகிறார். இசை, இலக்கியம், ஓவியம் என்ற கலைகளின் கூட்டுப் பரிமாணமாக அரவிந்தாட்சன் போன்ற ஆளுமைகள் பாலுவின் மனதில் எவ்வகைத் தாக்கம் செலுத்தினர் என்பதை இந்தப் பகுதி வழியே நாம் புரிந்துகொள்ளலாம். ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஜேஜே-விற்கு எதிரில் நின்றிருக்கும் தொழுநோய் பிச்சைக்காரனைப் பார்த்ததும், ஜேஜேவின் சிந்தைப் பிரவாகம் கட்டற்று ஓடுகின்றது. பிச்சைக்காரன் மீது இரக்கப்படுவது என்பது இயல்பு. ஆனால் அதில் நம்மை நாமே ஒரு படி மேலே ஏற்றிக்கொண்டு கொடையளிக்கும் பீடத்தில் நம்மை வைத்துக்கொள்ளும் ஒரு மறைமுக ஈகோ உணர்வும் எழுந்துவிடுகிறது. 'தான் கொடையளிக்கிறோம்' என்ற உணர்வின்றி ஒருவருக்கு அவருடைய நிலைக்குச் சமமாக, முடிந்தால் அதற்கும் கீழாகத் தன்னை வைத்துக்கொண்டு கொடையளிக்க இயலுமா என்ன? அப்படி உதவி பெற்றுக்கொள்பவர் சற்றேனும் சிறுமை உணர்வு அடையாமல், அதை வேறு வக்கிரப் பிரயோகமாகக் கொள்ளாமல் அதைக் கடந்துபோக முடியுமா? இது என்னைப் போன்ற சாமானியர்களின் சிந்தைப் போக்காக இருக்கலாம். ஜேஜேவிற்கு இந்தக் கைவிட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு குஷ்டரோகிப் பிச்சைக்காரனுக்கு உதவும் நிலை இன்னமும் பன்மடங்கு விரிவான பெரும் அகச்சிக்கலாக உருவெடுத்து நிற்கின்றது. அந்தச் சிக்கலில் ஜேஜே உழன்று தவித்து, தெளியும்போது பல மணிநேரம் கடந்துவிட்டிருக்கின்றது. இப்போது உணர்ச்சிப் பிரவாகத்துடன் அந்தக் குஷ்டரோகிப் பிச்சைக்காரனைத் தேடி ஓடி வேறொரு குஷ்டரோகியைக் காண்கின்றான். அவனுக்கு முன்னால் ஒரு வெள்ளி நாணயத்தைப் போட்டுவிட்டு, அவனால் அந்த நாணயத்தைத் தரையிலிருந்து பற்றியெடுக்க முடியுமோ என்று உடனடி உந்துதலில் அந்த நாணயத்தை எடுத்துக் கொடுக்கக் குனிகிறான். அந்த இடைப்பட்ட பின்ன நொடியில் அந்தக் குஷ்டரோகி அந்த நாணயத்தைத் தன் காலால் அழுத்திக் காபந்து பண்ணிக்கொள்கிறான். இந்தச் சம்பவம் ஜேஜே-வைப் பெரும் அவமானத்திற்குள்ளாக்குகிறது. 'ஜென்மக் கணக்கு' எனும் சிறுகதையில் இப்படியானதொரு அனுபவச் சித்திரத்தை நானும் எழுதியிருக்கிறேன். பாலுவோ, ஜேஜே-வோ அடைந்த அனுபவம்போல் அந்தச் சித்திரமும் என் அனுபவத்தின்பால் உந்தப்பட்டு உருவானதுதான். தன்னுணர்வு அற்றுப் பிச்சையளிப்பது பற்றிய அகக் கூச்சத்தில் தடுமாறும் ஒரு பாத்திரம். எதிரில் இருக்கும் பிச்சைக்காரி அவன் தடுமாற்றத்தை மறுதளிக்கும் அகந்தையாகப் புரிந்துகொண்டு அவளிடமிருந்த ஓர் இருபது பைசா நாணயத்தை இவனுக்குக் கொடுத்துவிட்டு விலகிப் போவாள். அந்தச் சிறுமையை எப்படிக் கடப்பது என்று அவன் அல்லலுறுவான்.

தனிநபர் சுதந்திரச் சிந்தையின் அபத்த வெளிப்பாடுகள் இப்படியான நம்ப முடியாத முரண்களில் கொண்டு நிறுத்திவிடுகின்றன. முல்லைக்கல் மாதவன் நாயர் போன்ற வெகுஜன வணிகப் படைப்பாளிகளின் சிந்தைக்கு அப்பாற்பட்ட வெளியில் ஜேஜே நின்றுகொண்டிருக்கிறான். சாமர்த்தியமான பெயர் உதிர்த்தல்கள், உலக இலக்கிய வாசிப்பனுபவம் என்கிற பீற்றல்கள், மைய நிரோட்ட இலக்கியப் போக்கில் எதிராகத் தருக்கி நிற்கும் அகந்தை, இவையெல்லாம் முல்லைக்கல் மாதவன் நாயரைச் சீண்டுகின்றன. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியாத நிலை. அதனால் உண்டாகும் எரிச்சல்களும் கோபங்களும் கிளர்ந்தெழுகின்றன. தங்கள் நிலையைக் காபந்து பண்ணிக்கொள்வதற்கென இலக்குகளை மாற்றியமைத்துக் கொண்டு சாமர்த்தியக் கேள்விகளைச் சாடிக்கொள்கின்றனர். இடையே ஜேஜே-வின் வாழ்க்கையின் காதல் பக்கம் ஒன்று வந்துபோகின்றது. ஜேஜே-யின் மனைவி சாராம்மா ஜேஜே மிகவும் திறமைசாலியான அரசியல்வாதியாக இருக்கிறார். அரவிந்தாட்சனின் சொற்களில், பாலுவிற்குத் தெரிவது ஜேஜே தன்னை ஒரு பெரும் இசையுலக பெர்ஃபெக்‌ஷனிஸ்டாக வைத்துக்கொண்டு, ஏனைய அபஸ்வரங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வாழ்க்கை முழுவதும் கத்திக்கொண்டே இருந்திருக்கின்றான். ஜேஜே-வின் மீது தீவிர விமர்சனம் வைத்திருக்கும் பலருக்கும் அவன் மீதான அபிமானம் குன்றியதில்லை. மாறாக ஜேஜே-விற்கு எதுவும் பிடிக்காமல் போய்க்கொண்டிருந்தன. பாலு ஜேஜே-வின் பால்யக் காலம்பற்றிப் பிரஸ்தாபிக்க ஆரம்பிக்கின்றான். ஜேஜே-வின் எழுத்துலகப் பயணம்பற்றி விரிவான பல குறிப்புகள் சொல்லப்படுகின்றன. அவனுடைய கால்பந்தாட்ட விளையாட்டு அனுபவங்கள்பற்றி அவ்விளையாட்டின் நுணுக்கங்கள்பற்றி ஜேஜே எழுதிய கட்டுரைகள், அவனுடைய தொழிற்சங்க நலப் பங்களிப்புகள், அதனால் சிறை சென்றது, அவனுடைய இன்னபிற புத்தகங்கள் வெளியான ஆண்டு என்று அவனுடைய இறப்புவரை நுணுக்கமாகத் தொகுக்கப்பட்ட குறிப்புகளை நாம் காண முடிகின்றது. இந்தக் குறிப்புகளின் தொகுப்பு இந்த நாவலுக்கு ஒரு வித்தியாசமான வடிவத்தை அளித்தாலும் ஜேஜே எனும் ஆளுமை பற்றியதொரு குறுக்குவெட்டுத் தோற்றம் அளிக்கப்படுகின்றது. தன்னுடைய அன்றாடப் பணிகளுக்கென, தன் குடும்பத்திற்குத் தேவையான இதர வேலைகளுக்கென ஒரு குற்றேவல் புரியும் தேவதையை அவன் மனம் நாடுகிறது. அப்போதுதான் அவன் இந்தச் சமூகத்திற்கான மகத்தான பங்களிப்பைச் சுதந்திரமாகவும் தீர்க்கமாகவும் செய்ய முடியும். இதே போன்றதொரு பாதிப்பை பாரதியின் வாழ்க்கையிலும் நாம் காண முடிகின்றது. எங்கோ இருக்கும் கரும்புத் தோட்ட ஊழியர்களுக்காக மனம் இரங்கிக் கவி பாடும் மனதை அன்றாடப் பசிப்பிணிக்கென அல்லாட வைப்பது நியாயமாகுமா.

ஜேஜே-வின் இறுதிக் காலங்களில் அவன் இந்த மனித சமூகம்மீது தொடர்ந்து நிராசைக்குட்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஓர் எழுத்தாளனை நேர்த்தியாக மதிப்பிடுவதுபோல், ஜேஜே-வின் மூன்று முக்கிய நூல்களைக் கொண்டு, ஓர் அனுபந்தமும் இந்த நாவலின் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலுக்குப் பின்னர் தமிழ்வெளியில் இதுபோன்ற நவீன போக்குகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் பல வந்திருக்கின்றன. அந்தவகையில் ஒரு முக்கியமான போக்கை ஜேஜே சில குறிப்புகள் தொடங்கி வைத்திருக்கின்றன.

ஜேஜே-வின் மீதான பாலுவின் பிரேமை, மெள்ள மெள்ள ஜேஜே-வின் ஆதர்சமான அரவிந்தாட்ச மேனன்மீது சென்றடைகிறது. பித்தேறிய படைப்பூக்க மனநிலையிலிருந்து, ஒழுங்கமைதி கொண்ட தாள லயத்துடனான செய்நேர்த்தியின் அடர்த்தி நோக்கி ஜேஜே நகர்கிறான். அரவிந்தாட்ச மேனன் பேனாவில் மை நிரப்பும் அன்றாடச் செயலின் தாள லயத்துடனான இசைவில் மையம் கொள்ளும் ஜேஜேவின் குறிப்புடன் நாவல் நிறைவடைகிறது.

பாலுவோ, அல்லது ஜேஜே-வோ தீர்க்கதரிசனத்துடன் சொல்லிய கிணற்றுத் தவளைகள் தங்கள் சுவர்களைத் தாண்டி வெளியே வந்து வெட்டவெளியில் இனிய சங்கீதம் பாட ஆரம்பித்துவிட்டனவா என்றால் அதொரு நீண்ட விவாதத்திற்குத்தான் நம்மை இட்டுச் செல்கிறது. ஆனால் அந்தக் கிணற்றின் சுவர்களை அளந்து பார்க்க ஓர் அலகை இந்த நூல் நிச்சயமாக உருவாக்கித் தந்திருக்கின்றது. இலக்கிய வெளி எனும் கிணற்றை மூழ்கடிக்கும் வெள்ளத்தின் தோற்றுவாய் என இந்த நூலைக் குறிப்பிட்டலாம்.

(சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் "நூல் வாசிப்பு முற்றம்" சார்பாக, ’ஜே ஜே சில குறிப்புகள்’ நூல் பற்றிய கருத்துரை, 9 நவ 2023, வியாழனன்று ஒளிபரப்பாகியது. அதன் எழுத்து வடிவம்.)

நன்றி:

https://www.sridharblogs.com/2023/12/blog-post.html